அசின் விராது – ஞானசாரர் மியன்மாரில் சந்தித்தனர்
இலங்கையிலிருந்து மியன்மாருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு சென்றடைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் அசின் விராது தேரர் தலைமையிலான பௌத்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி ரோஹிங் யாவில் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகளின் உண்மையான கள நிலைமை பற்றி ஆராய்ந்தனர்.
மேலும் ரோஹிங்யாவில் பௌத்தர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு மேலும் பலமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாகவும் இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என பொதுபலசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் பௌத்த தேரவாத உறவினை தற்கால சூழ்நிலையில் மேலும் பலப்படுத்தும் வகையில் பொதுபலசேனா அமைப்பும் மியன்மார் பௌத்த அமைப்பும் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்படுவதாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியன்மாரில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் தலைமையிலான குழுவினர் கடந்த 8 ஆம் திகதி மியன்மாரைச் சென்றடைந்தனர். மியன்மார் பௌத்த அமைப்பின் தலைவர் அசின் விராது தேரருக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையிலான பலகட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றன. பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-vv