• Sat. Oct 11th, 2025

“வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு” –  முதலமைச்சர் நஸீர் அஹமட்

Byadmin

Jun 5, 2017
“செமட்ட செவன” எனும் ஆயிரம்  வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தில் 36 வீடகளை நிருமாணிப்பதற்கான அடிக்கல்லை ஞாயிற்றுக்கிழமை (04.06.2017) நாட்டி வைத்த பின் பயனாளிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்;
வீடமைப்பு அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, புனர்வாழ்வு புனரமைப்பு இப்படி வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்கின்ற எந்தப் பிரிவாக இருந்தாலும், வீடமைப்புத் திட்டம் என்று வருகின்றபோது கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றது.
வடக்கிலே எத்தனையோ பாரிய வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையிலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு குடியிருக்க ஒரு வீடு கிடைக்கும் என்ற அவர்களது கனவை நனவாக்க முடியாமல் புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதை வேதனையுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
விகிதாரசாரப்படி இந்த புறக்கணிப்புக்கள் இடம்பெற்றிருப்பதை நான் நேரடியாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸாவிடமும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதனிடமும் சுட்டிக் காட்டியிருக்கின்றேன்.
அதனை அவர்கள் ஏற்றுக்  கொண்டு இனி வரும் காலங்களில் அமுல்படுத்தப்படவிருக்கின்ற வீடமைப்பு வேலைத் திட்டங்களில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படாத அளவுக்கு தாம் கரிசனை காட்டுவதாக என்னிடம் வாக்குறுதி அளித்திருக்கின்றார்கள்.
விகிதாசாரப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இன மத பேதமில்லாமல் வீடுகள் கட்டிக்  கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இப்பொழுது கிழக்கில் மக்களுக்கு ஒரு வீடமைத்துக் கொடுப்பதும் ஒரு துண்டு நிலத்தைப் பெறுவதும் கானல் நீராக உள்ளது.
மக்களின் சொந்தக்  காணிகளை தனவந்தர்கள், நிலச் சுவாந்தர்கள், செல்வாக்குள்ள நபர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் அடாத்தாகச் சுருட்டிக் கொண்டுள்ளார்கள். இதற்கு அதிகாரிகள் துணை போயிருக்கின்றார்கள்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வாழ்வதற்கு வீடும் இன்றி வாழ்வாதாரத்துக்கு காணியுமின்றி அவஸ்தைப் படுவதை நாங்கள் அங்கீகரித்துக் கொண்டிருக்க முடியாது
1983ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமைக்கப்பட்ட ஏறாவூர் மிச் நகர் கிராமத்திலுள்ள சுமார் 80 வீடுகளுக்கும் அதனோடிணைந்த காணிகளுக்கும் இன்னமும் உரித்தாவணங்கள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலைமை இருந்து கொண்டிருக்கிளன்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளுக்காக காணிகளுக்காக அவர்களது உரித்தாவணங்களுக்காக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
பொது மக்களின் காணிகளை எந்த செல்வாக்குள்ள நபர்களோ, அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ அடாத்தாக கையகப்படுத்தியிருந்தாலும் அவற்றை பொதுமக்களிடம் மீளப் சேர்ப்பிக்கும் வரை ஓயமாட்டோம்.
இதில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற பேதமில்லை உரியவர்களின் காணி அவர்களிடம் உரிய முறைப்படி பெற்றுக் கொடுக்க உறுதி பூண்டுள்ளோம்.
காணிகளைக் கையகப் படுத்தி வைத்திருக்கின்ற அபகர்ப்பாளர்களின்  பட்டியல் எம்மிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. காணிக் கொள்கையைக் கையாவள்வதில் 13வது அரசியல் திருத்தத்தில் சொல்லப்பட்ட விடயங்களை அமுலாக்காமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டு வருகின்றது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *