கிந்தோட்டை வன்முறைகளின் போது 127 சம்பவங்கள் பதிவு
காலி கிந்தோட்டை பகுதியில் சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை வன்முறையாக மாறியதால் மொத்தமாக 127 அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் விசாரணைகள் ஊடாக இவை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். இந்நிலையில் இவை தொடர்பில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோனின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெறும் விஷேட விசாரணைகள் தொடர்வதாகவும் இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கைது செய்யப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கிந்தோட்டையில் நிலவிய பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்புக்கு சிறப்புத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிந்தோட்டை மேற்கு, கிந்தோட்டை கிழக்கு, குருந்துவந்த, மஹஹப்புகல, வெலிபிட்டி, மோதர, உக்வத்த, பியதிகம ஆகிய 7 கிராமசேவகர் பிரிவுகளும் மூன்று வலயங்களுக்குள் உள்ளடங்கும் வகையில் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயத்தின் பாதுகாப்பும் ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
அதன்படி கிந்தோட்டை பகுதியில் நேற்று மாலை ஆகும்போதும், 102 கடற்படையினர், 74 இராணுவத்தினர், 428 பொலிஸார் மற்றும் 100 அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
இதனிடையே கிந்தோட்டை வன்முறைகள் இடம்பெற முன்னரேயே அவற்றைத் தடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் அவை தவறவிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்ணான்டோவின் மேற்பார்வையில் காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோனின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இது தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கிந்தோட்டை வன்முறைகளின் போது சிங்கள, முஸ்லிம் சமூகத்தவர்களுக்குச் சொந்தமான 81 வீடுகள், 18 வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 6 முச்சக்கர வண்டிகளும், ஒரு லொறியும், வேன் ஒன்றும், 8 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைவிட நான்கு பள்ளிவாசல்களும் இதன்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன் 8 திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதன்படியே மொத்தமாக கிந்தோட்டை வன்முறைகளில் 127 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக விசாரணைகளுக்குப் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதனைவிட சமூக வலைத்தளங்கள் ஊடாக மோதலைத் தூண்டும் வகையிலான பதிவுகளை இடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணினிக் குற்றங்கள் பிரிவும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக (ஆரம்ப சம்பவங்கள் உட்பட) 22 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.