இன்று போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிக்கு வந்து, ஹதியா அளித்த பேட்டி
கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலா (வயது 24).
இவர் கடந்த 2010ம் ஆண்டு சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டு படிப்பில் சேர்ந்தார்.
இங்கு படித்த போது இஸ்லாமிய மதத்திற்கு மாறியதுடன் தனது பெயரை ஹாதியா என்றும் மாற்றி கொண்டார். நான்கரை ஆண்டு படிப்பை முடித்த பின்னர் ஒரு மாதம் மட்டுமே கல்லூரியில் மருத்துவ பயிற்சி முடித்திருந்தார்.
இந்த நிலையில் அதே கல்லூரியில் படித்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஷபின்ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தகவல் அறிந்த மாணவியின் தந்தை அசோகன் கேரள ஐகோர்ட்டை அணுகினார்.
அப்போது ஷபின்ஜகான் தனது மகள் அகிலாவை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ததாகவும், அவரை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தல் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றம் ஹாதியாவை பெற்றோருடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து ஷபின்ஜகான் சுப்ரீம்கோர்ட்டில் முறையீடு செய்தார். வழக்கின் உண்மை தன்மையை அறிய தேசிய புலனாய்வு முகமைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை திரும்ப பெற கோரி ஷபின்ஜகான் மனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரில் கோர்ட்டில் ஆஜரான ஹாதியா தனது கணவருடன் வசிக்க விரும்புவதாகவும், இடையில் நிறுத்திய படிப்பை தொடர விரும்புவ தாகவும் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதையடுத்து ஹாதியாவை சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்து அவர் கல்லூரி படிப்பை தொடர ஏற்பாடு செய்யும்படியும் கேரள போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் ஹாதியாவின் பாதுகாவலராக கல்லூரி முதல்வரை நியமித்த கோர்ட் அவர் தனது படிப்பை தொடர கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து மாணவியை டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவைக்கு கேரள போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் கேரளா மற்றும் தமிழக போலீஸ் பாதுகாப்புடன் அவரை சேலம் அருகே உள்ள கல்லூரிக்கு அழைத்து வந்தனர்.
அங்கு கல்லூரி முதல்வர் கண்ணனை சந்தித்து தனது படிப்பைதொடர மாணவி அனுமதி கடிதம் கொடுத்தார். பின்னர் சேலம் சூரமங்கலத்தில் உள்ள கல்லூரி விடுதியில் நேற்றிரவு மாணவி தங்க வைக்கப்பட்டார்.
இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் கல்லூரிக்கு வந்தார் . அங்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் கூறுவது தவறு. எனது கணவரை சந்திக்க வேண்டும் என்பதே தற்போதைய ஆசை, உச்சநீதிமன்றம் அனுமதி தரும் என நம்புகிறேன்
கடந்த 6 மாதமாக செய்திதாளையோ, தொலைக்காட்சிகளையோ பார்க்காமல், இருட்டில் வாழ்ந்து வந்தேன். என் கணவரை கூட சந்திக்க முடியாமல் இருந்தேன்
உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட நான் இன்னும் முழுதாக படித்து பார்க்கவில்லை.என்விருப்பம் எல்லாம் விரும்பியவர்களுடன் பேச வேண்டும் என்பது தான்
நீதிமன்றத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று கேட்டேன், ஆனால் இதுவரை என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நான் இப்போது பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளேனா என்பதை கூட என்னால் கூற முடியவில்லை.
சித்த மருத்துவக்கல்லூரி தாளாளர் கூறும் போது, கல்லூரியில் பிற மாணவிகளைப்போலவே ஹாதியாவும் நடத்தப்படுவார். ஹாதியாவை சந்திக்க விரும்பும் உறவினர்கள் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.