அம்பாறை மாவட்ட மக்களின் மனதில் மிகக்குறுகிய காலத்தில் இடம்பிடித்த ஒரு மக்கள் இயக்கம் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அதன் தலைவர் கௌரவ மந்திரி றிசாத் பதியுதீனும் எனலாம். பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தாலும் அந்த காங்கிரஸ் வடக்கில் தேங்கி நின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காரைதீவு,நாவிதன்வெளி பிரதேச சபைகளில் ஆளும் தரப்பினருடன் இணைந்து அவர்களின் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கி காரைதீவு சபையில் 1000 வாக்குகளை பெற்றதன் மூலம் தமது வரவை அம்பாறையில் பதிவுசெய்தது.(இன்னும் 300 வாக்குகள் கிடைத்திருந்தால் அந்த சபையில் ஒரு ஆசனம் பெரும் வாய்ப்பு இருந்தது. ) பின்னர் நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் மீண்டும் வெற்றிலையுடன் கூட்டு சேர்ந்து பலமான அணியாக களமிறங்கியது. அதன் மூலம் அந்த மாநகர சபையில் ஒரு சிறிய கிராமத்தின் சரியான அரசியல் வியூகத்தாலும் கல்முனையில் பலமான வாக்குவங்கியுடன் களமிறங்கிய வெஸ்டர் ரியாஸின் செல்வாக்கான அதிகப்படியான வாக்குகளால் மக்கள் காங்கிரசுக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. (கடந்த பொதுத்தேர்தலின் போது வெற்றிலையை பிரதிநிதிதித்துவ படுத்திய கல்முனை ரியாஸும் மருதமுனை ரஹ்மானும் மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர். )
அந்த தேர்தலில் வேட்பாளர்களாக இருந்த முபாரக் மௌலவி,மான்குட்டி ஜுனைதீன்,மருதூர் அன்சார்,தர்ம கபீர் , எஹியாகான்,ரிஷாட்,போன்றவர்களின் பங்களிப்பு அளப்பரியது எனலாம். றிசாத் எனும் தலைவரை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள். அதன் பின்னர் மக்கள் காங்கிரஸ் மீண்டும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. காங்கிரசின் செயலாளர் கல்முனையை சேர்ந்தவர் என்றாலும் காங்கிரசின் பலம் மேலோங்க வில்லை. அதற்கான காரணமாக காங்கிரஸின் செயலாளர் பல காரணங்களை ஊடகங்களில் தொடர்ந்தும் கூறிவருவதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
கடந்த பொதுத்தேர்தல் அறிவிக்க முன்னர் சுமார் மூன்று மாதங்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் அந்த இயக்கத்தை 30 வருடங்களாக அசைக்க முடியாது வேரூன்றி நிட்கும் முஸ்லீம் காங்கிரஸின் கோட்டைக்குள் புகுந்து மக்கள் மயப்படுத்தும் பணியில் மிகத் தீவிரமாக செயட்பட்டவர்கள் வரிசையில் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ,முன்னாள் காங்கிரசின் இளைஜர் அமைப்பாளரும் சர்வதேச விடயங்களுக்காக பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா, பிராந்திய அமைப்பாளர் லயன்ஸ் சித்திக் நதீர், இப்படிப்பலரின் இரவுபகல் பாராத உழைப்பு உள்ளது என்பதை நடுநிலையாக சிந்திக்கும் யாரும் மறக்கவோ மறுக்கவோ மாட்டார்கள். ஆனால் இவர்களின் முகங்களை இப்போதெல்லாம் முன்வரிசையில் யாரும் காண்பதில்லை……
தேர்தல் அறிவித்தவுடன் பல கோரிக்கைகளை முன்வைப்பதாக கூறிக்கொண்டு மக்கள் காங்கிரசின் பக்கம் பலரும் படையெடுத்தனர். அந்த படையெடுப்பில் பல பம்மாத்துக்கள் காட்டப்பட்டாலும் மக்கள் யாரை தெரிவுசெய்தனர் என்பதை வாக்குகள் எண்ணும் இடத்துக்கு போன அந்தந்த வேட்பாளர்களும் அவர்களது தீவிர ஆதரவாளர்களும் நன்றாக அறிவார்கள். சமூக வலைத்தளங்களில் கூலிக்கு ஆட்களை அமர்த்தி தாங்களே அதிகூடிய வாக்குகள் பெற்றதாக மாயையை உருவாக்கியவர்கள் இப்போது பயத்தின் கோபுரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
முன்னாள் இரு தடவைகள் மாகாண சபையை அலங்கரித்த சகோ.ஜெமீல் அவர்களுக்கும் முன்னாள் கல்முனை முதல்வர் அவர்களுக்கும் புகைந்துகொண்டிருக்கும் புகை இன்னும் அணையாமல் இருப்பது எதிர்வரும் மாகாண சபையில் அதாவுல்லாஹ்வின் பக்கம் ஒருவரை அழைத்துசெல்லும் என்பதை சிந்திக்கும் ஆற்றல் உள்ள சகலரும் ஏற்றுக்கொள்வர். முதலில் இருதடவைகள் மாகாணசபைக்கு வியூகம் அமைத்து ஆசனம் பெற்ற தேசிய காங்கிரசுக்கு இம்முறை கல்முனை தொகுதிக்கு இவர்களில் ஒருவர் வேட்பாளராவர் என்பது காலம் கூற இருக்கிற உண்மை.
சம்மாந்துறையில் தளமாக கொண்டு இருக்கின்ற முன்னாள் உபவேந்தர் தேசியபட்டியலுக்கு குறிவைத்து காத்திருக்கிறார் என்பதும் அது கிடைக்காமல் விட்டால் நீல அணியில் இணைந்து கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது என்பதை அந்த காங்கிரசின் தலைமை நன்றாக அறிந்துவைத்துள்ளது. பொத்துவில் தொகுதியில் இருக்கும் யானையின் தீவிர ஆதரவாளர் இப்போதும் தமக்கான சரியான அங்கீகாரம் இல்லாமல் இருப்பதாக புலம்பித்திரிவது தலைமைக்கு தெரியாமலும் இல்லை. கல்முனை இளம் சக்திகளை ஒன்றிணைக்க சிரேஷ்ட அறிவிப்பாளரை நியமித்திருக்கும் காங்கிரஸ் அந்த நியமனம் சரியா என்பதை மீண்டும் பரிசீலிக்கும் நிலை இல்லாமலும் இல்லை.அந்த பதவியை மான்குட்டி ஜுனைதீனிடம் கொடுத்திருந்தால் அது சிறப்பாக இயக்கம் பெற்றிருக்கும் என்பது மான்குட்டியின் ஆளுமையை தெரிந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.
இப்படி மரத்தை வேரோடு சாய்க்க புறப்பட்ட அணியினர் தமது சுகபோகத்தில் கிடைக்கப்பெற்ற குறைகளினால் ஓரமாக நினைக்கும் நிலைக்கு அண்மித்துள்ளார்கள் என்பதை அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் காங்கிரஸின் உண்மையாக விசுவாசிகளும் நன்றாக உணர ஆரம்பித்துள்ளார்கள். காங்கிரஸை உண்மையாக சுவாசித்து மயிலுக்கு தீனிபோட்ட சகலரும் இன்று மயில் சவாரியை விட்டு ஒதுங்கி உள்ளார்கள். இதனை நன்றாக உணர்ந்த காங்கிரஸின் தலைமை
முஸ்லிங்களை ஆட்டிப்படைத்த இறக்காம சிலை விவகாரம் முதல் சாய்ந்தமருது மாகாண காரியாலயம் வரை தலைமையின் நேரடிக் கவனத்திட்க்கு கொண்டுசென்றும் ஆக்கபூர்மான எந்த அசைவுமின்றி இருப்பதும் ஹக்கீம் வந்தால் றிசாத் வருவார் எனும் கோட்பாட்டின் படி பல தடவைகள் முஸ்லிம் காங்கிரசி தலைவரின் வானூர்தி அம்பாறைக்கு வந்தும் மக்கள் காங்கிரசின் தலைவரின் வானூர்தி வராமலிருப்பதும் எதை சொல்கிறது என்பதை சிந்தித்தால் நன்றாக விளங்க முடியும்.
ஒட்டுமொத்தமாக சொல்வதாயின் அம்பாறை முக்கியஸ்தர்களை பதவியும் சொகுசும் கொடுத்து அவரால் தாக்காட்ட முடியாமல் இருக்கிறார் என்பதே உண்மை. காங்கிரசை உயிராக நினைத்த எல்லோரும் காங்கிரஸை விட்டு வெளியேறியும் அதிருப்தியுடனும் இருக்கிறார்கள் என்பதை தலைவர் நன்றாக உணர்ந்துள்ளார். இறைவனை அதிகமாக நம்பும் தலைமை இதய சுத்தியுடன் காங்கிரசை வளர்த்த போராளிகளின் நேரடி சாபத்தில் காங்கிரஸ் சிக்கிக்கொண்டதை உணர்ந்துள்ளார். அத்துடன் இறைவனின் எழுத்துப்படி தனது மந்திரிக்கிரீடம் அகன்றால் இவர்கள் பறந்து சென்றுவிடுவார்கள் என்பதையும் நன்றாக அறிந்துவைத்துள்ளார்.
நான் மேலே கூறியிருக்கும் சகலத்தையும் இப்போது விளங்குவது கடினமாக இருந்தாலும் எதிர்வரும் ஒரு தேர்தல் உங்களுக்கு இலகுவாக விளக்கும் என்பது எதார்த்தம் .
அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு லைமகன் ஹுதா.)
தலைவர்,அல்-மீஸான் பௌண்டஷன்.
இலங்கை
ULN.HUTHA UMAR
B.Sc IT,Dip.in.Mass media, HND in HRM, MBA (HRM)(Reading..)
Chairman,AL-MEEZAN FOUNDATION ,SRILANKA