• Sat. Oct 11th, 2025

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அதிகார பூர்வமாக அறிவித்த டிரம்ப்

Byadmin

Dec 7, 2017 , , ,

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அதிகார பூர்வமாக அறிவித்த டிரம்ப்

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக அறிவித்தார்.

வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையாக கருத முடியாது என டரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ´´இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்´´ என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *