(நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்கு யுவதிகளின் உயிரை காப்பாற்றிய இளம் பிக்கு..!)
ஒருவருக்கு இரக்கத்தைக் காட்டுவதைப் போன்றே உயிர்காக்க வழிசெய்தலும் உயரிய தர்மமாக கொள்ளப்படுகிறது. அதனை எடுத்துகாட்டாகும் வகையில் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த நான்கு யுவதிகளின் உயிரை இளம் பிக்கு ஒருவர் காப்பாற்றிய சம்பவமொன்று காலி, கொக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காலி பரகொட ரஜமஹா விகாரையைச் சேர்ந்த கொக்மாதுவ அநுரத்த என்ற பிக்கு ஒருவரே இவ்வாறு கடந்த 23 ஆம் திகதி காலி, கொக்கல கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் அலையில் அள்ளுண்டு சென்ற 4 யுவதிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமையன்று கொக்கல கடற்கரையில் இந்த யுவதிகள் நால்வரும் தமது குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதன் பின்னர் கடலில் நீராடியுள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் திடீரெனவந்த பாரிய அலையில் சிக்குண்டு, அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், தனது மகள்மார் அலையில் அடித்துச் செல்லப்படுவதாக கதறினார்.
எனினும், பலத்த அலையோசையினால் அவரது கதறல் எவருக்கும் கேட்கவில்லை. அதனிடையே, காலி, பரகொட விகாராதிபதி அஜித தேரரின் உறவினர்கள் சிலர் அம்பாறையிலிருந்து வந்திருந்த நிலையில், அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் விகாராதிபதியுடன் கொக்கல கடற்கரைக்குச் சென்றிருந்தனர். அவ்வேளையில் விகாரா திபதியின் சீடரான கொக்மாதுவ அநுருத்த பிக்குவும் அவர்களுடன் சென்றுள்ளார்.
அதன்போது, தனது மகள்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்ட பெண்ணின் குரல் இப் பிக்குவுக்கு கேட்ட மறுகணமே, காவி உடையுடன் தனது உயிரையும் துச்சமாக மதித்து கடலுக்குள் குதித்து, கடலில் மூழ்கிய மூன்று யுவதிகளை ஒரே தடவையில் காப்பாற்றி அவர்களை கரைசேர்த்திருந்த அதேவேளை, நான்காமவரைக் காப்பாற்றும் போது பிக்குவுக்கு உதவியாக வெளிநாட்டவரொருவர் கைகொடுத்த நிலையில் அந்த யுவதியையும் பத்திரமாக உயிருடன் கரைசேர்த்துள்ளனர்.
இது தொடர்பில் அநுருத்த தேரர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான இடங்களில் நீராடுபவர்களின் பாதுகாப்புக்காக ஏதேனும் வழிவகைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நான் காவி உடைக்கு உண்டான கட்டுப்பாடுகளையும் மீறி நான்கு பெண்களை காப்பாற்றியுள்ளேன். எனக்கும் அவ்வளவாக நீந்தத் தெரியாது.
இருப்பினும் ஆபத்து வரும்போது நான் அதனைச் செய்தேன். அல்லல்படுபவர்களுக்கு உதவவேண்டும் என பௌத்த தர்மம் கூறுகின்றது. அதனாலேயே நான் இதனை செய்தேன் என்றார்.