• Sun. Oct 12th, 2025

குணாலில் 5000 ஆண்டுகள் பழமையான இடத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடக்கம்..!

Byadmin

Feb 6, 2018

(குணாலில் 5000 ஆண்டுகள் பழமையான இடத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடக்கம்..!)

உலகிலேயே மிகவும் பழமையான நாகரிகத்தை கொண்டது சிந்து சமவெளி அல்லது ஹரப்பா நாகரிகம். சிந்து சமவெளி பண்பாட்டின் காலத்தை கி.மு. 2000 என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதற்கும் முந்தைய தொன்மையான இடமாக அரியானாவின் பெதாகாபாத் மாவட்டம் குணால் பகுதி இருப்பது தொல்லியல் ஆய்வில் தெரியவந்தது. கடந்த 1986-ம் ஆண்டு இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வப்போது இப்பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, குணாலில் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி பணியை தேசிய அருங்காட்சியக பொது இயக்குநர் பி.ஆர்.மணி, அரியானா தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறை துணை இயக்குநர் பனானி பட்டாசார்யா ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர்.

இந்திய துணைக்கண்டத்தில், ஹரப்பாவுக்கு முந்தைய தொன்மையான குணாலில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் எதிர்கால ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அரியானா தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த ஆய்வுப் பணியில், குழி வீடுகள், களிமண் வீடுகள், சின்னங்கள், நெக்லசின் 6 தங்க மணிகள், காப்பு, உடைந்த வளையல்கள், விலைமதிப்பற்ற 12,445 கல் மணிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கி.மு. 3000 ஆண்டுக்கு முன்பே விலையுயர்ந்த அணிகலன்களை மக்கள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்திருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *