• Sat. Oct 11th, 2025

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

Byadmin

Feb 25, 2018

(வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை)

கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும்.

தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்சனைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

கர்ப்பக் காலத்தில் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.

எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.

அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும்.

வேலைக்குச் செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், இறுக்கத்தைத் தவிர்க்கலாம். பஸ்ஸில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.

பேருந்து, அலுவலகம் என எந்த இடத்திலும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம். Deep Vein Thrombosis பிரச்சனை ஏற்படும். உட்கார்ந்து பயணிப்பது நல்லது. வீடு திரும்பியதும் மிதமான வெந்நீரில் கால்களைவைத்து எடுக்கவும். இரண்டு வேளைகள் குளிப்பது நல்லது.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம். கணவருடன் டூவீலரில் பயணிக்கும்போதும், வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போதும் மேடு பள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும். எனவே அதிக உயரம் இல்லாத செருப்பை அணிவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *