(பசளிக்கீரையை குழந்தைகள் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா..?)
ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்ளும் உணவுடன் கீரை ஒன்றை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். அது பெரியோர்களுக்கு மட்டுமல்ல, சிறு குழந்தைகளுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் பசளைக்கீரை என்பது மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் பொதிந்த கீரையாகும். இந்தக் கீரைக்கு உடம்பில் உள்ள சளியை இலக வைக்கும் தன்மை உண்டு. இதனால் பசளிக்கீரை உட்கொண்டவுடன் சிலருக்கு தடுமல் ஏற்படலாம்.
இதனைத் தடுக்க, பசளிக்கீரையுடன் பருப்பு, மிளகு, சீரகம், மஞ்சள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து உண்ணலாம். இந்த பசளிக்கீரையை பச்சிளம் குழந்தைகளுக்கும் கொடுப்பது சிறந்தது என்கிறது நவீன மருத்துவம்.
ஆம், பசளிக்கீரை சிறு குழந்தைகளுக்கும் உகந்தது. எனினும், குறைந்த பட்சம் 12 மாதங்களாவது நிரம்பிய குழந்தைக்கே இந்த பசளிக்கீரையை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பசளிக்கீரையை வழங்குவதனால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
01. எலும்புகள் உறுதி பெறும்
பசளிக்கீரையில் உள்ள கல்சியம், மக்னீசியம் மற்றும் பொஸ்பரஸ் என்பன எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. இதனால் குழந்தைகளின் எலும்புகள் உறுதிபெறுகின்றன.
02. தசை விருத்திக்கு சிறந்தது
பசளிக்கீரையில் உள்ள அமினோ அமிலங்கள் குழந்தைகளின் தசை விருத்திக்கு வித்திடுகின்றது.
03. இரத்த ஓட்டத்திற்கு சிறந்தது
இரும்பு மற்றும் பொட்டாசியம் என்பன இரத்த ஓட்டத்தை சீர் செய்கின்றன. இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.
04. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது
நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் கே, இந்தப் பசளிக்கீரையில் நிரம்பிக் காணப்படுகின்றது. இதன் மூலம் குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது.
05. உடலை வறட்சியடையாது பாதுகாக்கும்
பசளிக்கீரையில் 90 சதவீதமான நீர் உண்டு. சிறு குழந்தைகளுக்கு இதனை வழங்குவதன் மூலம், அவர்கள் உடல் வறட்சியடைவது தடுக்கப்படும்.