சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்துவதே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தவிர்க்கும் ஒரே வழி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிசாரை உரிய வகையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை ஸ்திரமில்லா தன்மையை ஏற்படுத்த காத்திருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு யோசனைகளுக்கு ஆதரவை திரட்டி கொள்ளும் நோக்கில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதை போன்ற கலவரம் ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இவ்வாறான நிலைமை தொடர்ந்தும் இடம்பெற அனுமதியளிக்க முடியாது என்றும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்களின் ஒத்துழைப்புடன் செயற்படும் கூட்டமைப்பு ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் தேவைப்பாடுகள் நிலவுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.