• Tue. Oct 14th, 2025

வடகொரிய தலைவரை சந்திக்க அமெரிக்க உளவுப்படை தலைவர் ரகசிய பயணம்..!

Byadmin

Apr 19, 2018

(வடகொரிய தலைவரை சந்திக்க அமெரிக்க உளவுப்படை தலைவர் ரகசிய பயணம்..!)

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது.

இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது.

ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது.

இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா பரிந்து பேசியது.

அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான தலைவர்கள் மட்டத்தில் ஆன சந்திப்பு, கடைசியாக 2000-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க வெளியுறவு மந்திரி மெடிலைன் ஆல்பிரைட்டுக்கும், கிம் ஜாங் அன்னின் தந்தை கிம் ஜாங் இல்லுக்கும் இடையே நடந்து உள்ளது.

இந்த நிலையில் டிரம்ப், கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு சமீபத்தில் ரகசிய பயணம் மேற்கொண்டு இருந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *