(“இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடாகும்” – பத்தேகம சமித்த தேரர்)
இஸ்ரேலியர்களே! உங்களது கரங்கள் இரத்தத்தினால் நனைந்து போயுள்ளன. முத்திரை ஒட்டுவதற்காக பூசப்பட்டுள்ள பசைகளில் மிருகங்களின் சேர்க்கைகள் சேர்க்கப்படவில்லை என்று உத்தரவாதமளித்துள்ள நீங்கள் பலஸ்தீன் காஸாவில் பலஸ்தீனர்களை மிருகங்களைப்போல் சுட்டுக் கொல்கிறீர்கள். அப்பாவி பலஸ்தீன் மக்களுக்காக இலங்கையர்கள் நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தென்மாகாணசபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார்.
பலஸ்தீனில் நடைபெற்ற சர்வதே மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்து இஸ்ரேலினால் விசா மறுக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கான ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேய அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பிலுள்ள பலஸ்தீன் தூதரகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்;
இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடாகும். பலஸ்தீன் மக்களை அடிமைப்படுத்தும் நாடாகும். இலங்கையரான எமக்கு பலஸ்தீனுக்கு செல்வதற்கு விசா மறுக்கப்பட்டமை அநீதியாகும். ஏன் எமக்கு விசா வழங்கவில்லை. நாங்கள் நிச்சயமாக பலஸ்தீன மக்கள் சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் வரை அவர்களுக்காக குரல் கொடுப்போம். ஆதரவளிப்போம்.
இஸ்ரேல் அடிப்படைவாதத்துக்கு எதிராக உலகில் மக்களைத் திரட்டுவதற்கான எமது முன்னெடுப்புகள் தொடரும். வருடாந்தம் பலஸ்தீனில் நடைபெறும் மாநாட்டுக்குச் செல்வதற்கு விசா கோரியே நான் விண்ணப்பித்திருந்தேன். நான் இலங்கையன். பயங்கரவாதியல்ல. கருணையைப்போதிக்கும் ஒரு மதத்துக்குச் சொந்தக்காரன். ஆனால் எனக்கு இஸ்ரேல் விசாவினை மறுத்துவிட்டது.
இதிலிருந்து இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பயங்கரவாதம் உறுதிப்படுத்தப்படுகிறது. பலஸ்தீனர்களின் விடுதலைக்காக இலங்கையர்கள் நாம் குரல் கொடுப்போம் என்றார்.
நிகழ்வில் பலஸ்தீனின் இலங்கைக்கான தூதரக அதிகாரி ஹிசாம் அபூ தாஹாவும் கலந்துகொண்டிருந்தார்.
-Vidivelli