(அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள்)
ரமழான் மாதத்தில் மூன்று முக்கிய நேரங்கள் உள்ளன.
எமக்கு எவ்வளவு முக்கியமான வேலையாக இருப்பினும், அம்மூன்று நேரங்களையும் அலட்சியம் செய்யாமலிருக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
ஏனெனில், ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கைக்கு, அந்நேரங்கள் சமமாக இருக்கின்றன. எனவே, அந் நேரங்களைப் பேணிக் கொண்டு, அவற்றை வணக்க வழிபாடுகளில் கழிக்கும் போது, மொத்தம் 90 மணித்தியால வணக்கங்களின் நன்மைகளை, ஒரு நாளிலேயே எமக்கு சம்பாதித்துக் கொள்ள முடியும்.
அவைகள் என்ன தெரியுமா…
( 01 ) நோன்பு திறக்கும் நேரம்.
இப்தாருக்குரிய ஏற்பாடுகளை நேர காலத்துடன் முடித்துக் கொண்டு, பிரார்த்தனை செய்வதில் முழுமையாக நாம் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், இப்தாருடைய நேரத்தில் நோன்பாளி ஒருவர் கேட்கும் துஆ அல்லாஹ்விடத்தில் எவ்விதத்திலும் மறுக்கப்பட மாட்டாது.
எனவே, எங்களுக்காகவும், எங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் பிரார்த்திப்பதற்காக நாம், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம், எமது பிரார்த்தனையின் போது நாம் மரணித்தவர்களையும் மறந்துவிடக் கூடாது. ஏனெனில், எங்கள் துஆவின் பால், அவர்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றனர்.
( 02 ) இரவின் இறுதிப் பகுதி
அல்லாஹ்வுடன் தனிமையில் உறவாடுவதற்குரிய நேரமாக, இந்நேரத்தை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், “நான் கொடுப்பதற்காக, என்னிடம் கேட்போர் யாரும் உள்ளனரா…?” , “நான் மன்னிப்பதற்காக, என்னிடம் மன்னிப்புக் கோரும் எவரும் உள்ளனரா…?” என்று, அல்லாஹ் அழைத்துக் கொண்டிருக்கும் பாக்கியமிக்க நேரமாக அது உள்ளது. அதனால், இந்நேரத்தில் அதிகம் அதிகமாக பாவ மன்னிப்புக் கோருவதற்கு நாம் முனைய வேண்டும்.
( 03 ) பஜ்ர் (சுபஹ்) தொழுகை முடிந்ததிலிருந்து, சூரிய உதயம் வரையிலான நேரம்
ஐந்து நேரமும் தொழுத கையோடு, தொழுத இடத்திலேயே அமர்ந்திருந்து, அல் – குர்ஆனை ஓதுதல், இறை சிந்தனை போன்றவற்றில் இந்நேரத்தைக் கழிக்க வேண்டும்.
இந்நேரங்களைப் பேணி, வணக்கங்களில் ஈடுபடுவதுடன், ஏனைய நேரங்களில் “திக்ர்” (இறை நினைவு) செய்தல், புறம் பேசுவதிலிருந்து தவிர்ந்து நடத்தல் போன்றவற்றில் கரிசனையாய் இருக்க வேண்டும். மேலும், எமக்கு (பர்ழான) கடமையான தொழுகைகளைத் தவறாமல் நிறைவேற்றுவதற்கு, மனதளவில் உறுதி கொள்ள வேண்டும். மேலும், ஏனைய (நபிலான) சுன்னத்தான வணக்கங்களை, முடியுமான இயன்றளவு அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், புனித ரமழான் மாதத்தின் இந்த 29 அல்லது 30 நாட்களும் விரைவாகவே சென்று, ரமழான் மாதமும் நிறைவு பெறும்.
மூன்று வகையான துஆக்கள் இருக்கின்றன. அவற்றை ஸுஜூதில் அல்லாஹ்விடம் கேட்பதற்கு நாம் மறக்கக் கூடாது.
( 01 ) “இறைவா…! என்னுடைய இறுதி முடிவை சிறப்பானதாக ஆக்கி வைப்பாயாக…!”
( 02 ) “இறைவா…! நான் மரணிக்க முன்னர், நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக…!”
( 03 ) “உள்ளங்களைப் புரட்டுபவனே…! உனது மார்க்கத்திலேயே எனது உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக…!”
இவற்றை நாம் சரியான முறையில் பின்பற்றி ஒழுகும்போது , நிச்சயம் அல்லாஹ், எமது ஈருலகக் கஷ்டங்களையும் நீக்கி வைப்பான்.
( “நன்மையான காரியமாக இருந்தால், நீ அதனை அற்பமாகக் கருதினாலும், அதனை செய்துவிடு. ஏனெனில், உனது எந்தக் காரியம் உன்னை சுவனத்தில் நுழையவிக்கும் என்பது உனக்குத் தெரியாது” )
— மெளலவி
ஐ. ஏ. காதிர் கான்
( தீனிய்யா ),
கல்லொழுவை,
மினுவாங்கொடை.