• Sat. Oct 11th, 2025

உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை

Byadmin

Jun 12, 2018

(உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை)

அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் – கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.

டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *