(நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு
பாகம்-5)
வை எல் எஸ் ஹமீட்
6 வது பாராளுமன்றத் தேர்தல்
—————————————
22 மார்ச், 1965
மொத்த ஆசனங்கள் -151
ஐ தே க- 66 ஆசனங்கள் (43.7%)
வாக்குகள் -1,590,929 (39.31%)
சு க- 41 ஆசனங்கள்
வாக்குகள் -1,221,437 (30.18%)
தமிழரசுக் கட்சி-14 ஆசனங்கள்
வாக்குகள்- 217,914 (5.38%)
செல்லுபடியான மொத்த வாக்குகள்: 4,046,720
7 வது பாராளுமன்றத் தேர்தல் -27, மார்ச், 1970
—————————————-
மொத்த ஆசனம்-151
சு க-91 ஆசனங்கள்ஏ
வாக்குகள் -1,839,979 (36.86%)
ஐ தே க-17 ஆசனங்கள்
வாக்குகள் -1,892,525 (37.91%)
LSSP-19 ஆசனங்கள்
வாக்குகள்-433,224 (8.68%)
தமிழரசுக் கட்சி-13 ஆசனங்கள்
வாக்குகள் -245,727 (4.92%)
கம்யூனிஸ்ட் கட்சி-6 ஆசனங்கள்
169,199 வாக்குகள் (3.39%)
மொத்த வாக்குகள் -4,991,798
இங்கு கவனிக்கவேண்டியவை
36.86% வாக்குகளைப்பெற்ற சு கட்சி 60.26% ஆசனங்களையும்
37.91% வாக்குகளைப்பெற்ற ஐ தே கட்சி 11.25% ஆசனங்களையும் பெறுகின்றது. ஜே ஆர் ஜயவர்த்தன 1978ம் ஆண்டு விகிதாசாரத் தேர்தலைக் கொண்டுவந்ததற்கான ஒரு பிரதான காரணம் இதுவாகும்.
அதேநேரம் சு கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சியுடனும் ( பெற்ற வாக்கு 8.68%) கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ( பெற்ற வாக்கு 3.39%) கூட்டுச் சேர்ந்து 116 ஆசனங்களுடன் ( மூன்றில் இரண்டு பங்கிற்குமேல்) ஆட்சியமைத்தது. இம்மூன்று கட்சிகளின் வாக்குகளைச் சேர்த்தும் 50% வரவில்லை. ( 48.93%) ஆனால் அவர்களின் கூட்டு ஆசன விகிதம் 76.82% ஆகும்.
இந்த 8.68%, 3.39% வாக்குகளைப்பெற்ற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து 2/3 பெரும்பான்மைபெற்று அரசியலமைப்புச் சட்டத்தை தாம்விரும்பியபடி மாற்றியதன் பின்னணியில் 12.5% வெட்டுப்புள்ளித் திட்டத்தையும் ஜே ஆர் அறிமுகப்படுத்தினார்.
இதுதான் இந்தியாவிலும் நடைபெறுகின்றது. 2017ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 14.20% முஸ்லிம்கள் இருந்தும் சொல்லும்படியான ஆசனங்கள் இல்லை. உத்தரப்பிரதேசத்தில் அவர்கள் 19.26% இருந்தும் கடந்த மாநிலசபைத் தேர்தலில் ஒரு ஆசனமும் பெறவில்லை. அண்மையில்தான் ஒரு இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளான முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர்களின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணந்து ஒரு முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கின்றார்கள்.
இங்கு முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதியில் கடந்தமுறை ஏன் ஒரு முஸ்லிம் தெரிவுசெய்யப்படவில்லை? என்ற ஒரு கேள்வி எழலாம். உத்தர பிரதேசத்தில் ஒன்றல்ல, பல முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் இருக்கின்றன. அவை அனைத்திலும் பாரதிய ஜனதாவைச்சேர்ந்த இந்துக்களே தெரிவுசெய்யப்பட்டார்கள்?
அது எவ்வாறு சாத்தியம் என நீங்கள் யோசிக்கலாம். முஸ்லிம்கள் வெறுக்கின்ற பாரதீய ஜனதாவிற்கு உத்தரப்பிரதேசத்தின் கடந்த சட்டசபைத் தேர்தலில் முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வாக்களித்தார்கள்.
ஏன் தாம் வெறுக்கும் கட்சிக்கு வாக்களித்தார்கள்? முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதியில் அவர்கள் இலகுவாக ஒரு அங்கத்தவரைப் பெறலாம்தானே!
காரணம் அச்சமாகும். தொகுதிமுறைத் தேர்தில் ஓரளவு மக்கள் செல்வாக்கிருந்தாலே ஒரு கட்சி ஆட்சியைப்பிடித்து விடலாம்; என்பதை மேலுள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புத் தென்பட்டது. எனவே, முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றாலும் எதிர்க்கட்சி ஆசனத்தில்தான் அமரவேண்டும். அந்நிலையில் முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவார்கள்; என்ற அச்சமே அவர்கள் அவ்வாறு வாக்களிப்பதற்கு காரணமாகியது.
இந்தப் பின்னணியில் புதிய மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை யோசித்துப் பாருங்கள். முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் வெற்றிபெற்றாலும் ஏனைய தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இந்நிலையில் 50% அல்லது அதற்குமேல் முஸ்லிம்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கப்போகின்றார்கள். இத்தனைக்கும் நம்மவர்கள் அன்று கை உயர்த்தாமல் இருந்திருந்தால் இந்த இக்கட்டான நிலை வந்திருக்காது.
ரணிலையும் மைத்திரியையும் திருப்திப்படுத்தப்போய் இன்று முஸ்லிம்களின் எதிர்காலப் பிரதிநிதித்துவமே கேள்விக்குறியாக இருக்கின்றது.
இந்த இலட்சணத்தில் இவர்கள் வீரவசனம் பேசி மீண்டும் சமுதாயத்தை ஏமாற்றவரும்போது உணர்வுகள் உச்சத்திற்குப்போகின்றன. சாதாரணநடையில் கூறுவதாக இருந்தால் இரத்தம் கொதிக்கிறது. இந்த யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளக் கூடாது; என்பதற்காகவே இந்த அமைச்சர்கள் எடுபிடிகளை வைத்துக்கொண்டு முகநூலில் சப்பை கொட்டுகிறார்கள். இதனை என்றுதான் இந்த சமுதாயம் புரிந்துகொள்ளுமோ?
8வது பாராளுமன்றத் தேர்தல் 21 ஜூலை, 1977
—————————————
மொத்த ஆசனங்கள் -168
ஐ தே க- 140 ஆசனங்கள் (83.33%)
வாக்குகள்- 3,179,221 (50.92%)
த வி கூ- 19 (11.30%)
வாக்குகள் -421,488 (6.75%)
சு க- 8ஆசனங்கள்(4.76%)
1,855,331 (29.72%)
இங்கும் கவனிக்க வேண்டியவை
50.92% அதாவது 51% எடுத்த ஐ தே கட்சிக்கு 83% ஆசனங்கள். 6.75% எடுத்த த வி கூட்டணிக்கு 11.30% ஆசனங்கள். ஆனால் 29.72 அதாவது 30% வாக்குகள் பெற்ற சு கட்சிக்கு வெறும் 4.76 அதாவது அண்ணளவாக 5% ஆசனங்கள். இதுதான் தொகுதிமுறைத் தேர்தலாகும்.
இலங்கையில் மொத்தமாக எட்டு பாராளுமன்றத் தேர்தல்கள் தொகுதி முறையில் நடைபெற்றிருப்பதைப் பார்த்தோம். இவற்றில் 1977 ம் ஆண்டுத் தேர்தலைத்தவிர வேறு எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் 50% வாக்குகள் பெறவில்லை. 1977ம் ஆண்டு முஸ்லிம்கட்சிகள் தோற்றம்பெற்றிருந்தால் சிலவேளை அத்தேர்தலிலும் 50% வாக்கு சாத்தியமற்றமற்றதாகப் போயிருக்கலாம்.
குறிப்பாக 1970 மற்றும் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களை எடுத்து நோக்கினால் 70ம் ஆண்டு 48.93% வாக்குகள் பெற்ற ஆளும் கூட்டணிக்கு கிடைத்த ஆசன விகிதம் 76.82, ( 116 ஆசனங்கள்), அதேநேரம் 51.07% வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த ஆசன விகிதம் 23.18 ( 35 ஆசனங்கள்) ஆகும்.
அதேபோன்று 77ம் ஆண்டு 50.92% வாக்குகளைப்பெற்ற ஆளுங்கட்சிக்கு கிடைத்த ஆசன விகிதம் 83.33% (140 ஆசனங்கள்). மறுபுறம் 49.08% வாக்குகள்பெற்ற எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த ஆசன விகிதம் வெறும் 16.67 ( 28 ஆசனங்கள் ) ஆகும்.
ஒப்பீட்டிற்காக,
கடந்த 2017 இல் நடைபெற்ற இந்த உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற வாக்குவீதம் 41.35 ஆகும். ஆனால் 403 அங்கத்தவர்கொண்ட சட்டசபையில் அவர்கள் வெற்றிபெற்ற ஆசனங்கள் 325ஆகும்.
அதாவது 80.64% ஆகும்.
(தொடரும் )