• Tue. Oct 14th, 2025

“முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை” – பொன்சேகா

Byadmin

Sep 11, 2018

(“முஸ்லிம்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை” – பொன்சேகா)

“முஸ்லிம் மக்கள் இலங்கையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிடப்படும் வதந்திகள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. யுத்த காலத்தில் கூட முஸ்லிம்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்” என அமைச்சர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான இன்பராசா என்பவர், விடுதலைப் புலிகள் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் 5000 ஆயுதங்களை இரண்டு முஸ்லிம் அமைச்சர்களிடம் விற்பனை செய்தததாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இந்த ஆயுதங்கள் முஸ்லிம்கள் மத்தியில் தற்போதும் புழக்கத்தில் இருப்பதாகவும் இதனால் சமூகங்களிடையே இன நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இரு முஸ்லிம் அமைச்சர்களும் தமது மறுப்பை பகிரங்கமாக வெளியிட்டிருந்தனர். இதனை நிரூபிக்குமாறும் சவால்விட்டிருந்தனர். இதற்கப்பால் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறியுமாறும் இக் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இது குறித்த பொலிஸ் முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையிலேயே இறுதிக்கட்ட யுத்தத்துக்கு தலைமை வகித்தவர் என்ற வகையில் அப்போதைய இராணுவத் தளபதியாகவிருந்த பொன்சேகா இக் கருத்தை முற்றாக மறுத்துள்ளார்.
இவ்வாறான கருத்துக்களை கூறுவதன் மூலம் இனங்களிடையே மீண்டும் முறுகல்களை தோற்றுவிக்க சிலர் முனைகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
அக் காலப்பகுதியில் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பின் அது தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பர். இவ்வாறு பெருந்தொகை ஆயுதங்கள் புலிகளிடமிருந்து முஸ்லிம்களால் கொள்வனவு செய்யப்பட்டிருப்பின் அன்றே இராணுவம் நடவடிக்கை எடுத்திருக்கும். அது தொடர்பில் சரத் பொன்சேகாவும் நிச்சயம் அறிந்திருப்பார்.  இன்று அவரே இவ்வாறு எதுவும் நடக்கவில்லை என மறுத்துவிட்ட நிலையில் இதன் பிற்பாடும் இன்பராசா போன்றவர்கள் இவற்றை பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
எனினும், கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடக சந்திப்பிலும் இன்பராசாவும் அவரது சகாக்களும் பங்கேற்று இதே பல்லவியைப் பாடியிருந்தனர். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வரும் பொது பல சேனா அமைப்புடன் இந்த அணியினர் கைகோர்த்திருப்பது ஆரோக்கியமானதொரு நகர்வல்ல. இந்த ஆயுதப் புரளியின் பின்னணியில் வேறு ஏதும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் உள்ளனவா எனும் சந்தேகத்தையும் இது கிளப்புகிறது.
இந்த விவகாரம் ஊடகங்களில் அதிக பேசுபொருளான நிலையிலும் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் அரசாங்கத்தினாலோ பாதுகாப்புத் தரப்பினாலோ எந்தவித விசாரணைகளும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. எனவேதான் அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளதைப் போன்று அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்தி இந்த ஆயுதப் புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *