(பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..?)
ஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர்ந்தாலும் எங்கள் நாட்டு சிறுவர்களை கடத்த முடியாது. காரணம், அந்நாடுகளில் சிறுவர்கள், பெண்கள் அனைவருமே தற்காப்புக்கலை பயின்றவர்கள்.
இது இவ்வாறிருக்க நமது பகுதிகளில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்காக பள்ளிவாசல்களுக்கு வருகின்ற இளைஞர்களை வைத்து நமது சமூகத்தின் வலுவை நாம் கண்டுகொள்ளலாம்.
இமாம் மிம்பரில் குத்பா உரை நிகழ்த்தும்போது பள்ளிவாசல் சுவர்களிலும் தூண்களிலும் தங்களுடைய முதுக்குப்புறங்களை முட்டுக்கொடுத்த வண்ணம் அமர்ந்திருப்பவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்களாகவே காணப்படுகிறார்கள். இதற்கு எந்தவூர் பள்ளிவாசல்களும் விதிவிலக்கல்ல.
அண்ணளவாக ஒரு மணிநேரம் கூட இவர்களால் ‘சைட் சப்போர்ட்’ இல்லாமல் உட்கார்ந்திருக்க முடிவதில்லை. காரணம் சோம்பேறித்தனம், உடல்ரீதியான பலவீனம், ஆர்வமின்மை. வலுவோடு வாழவேண்டிய இளைஞர் சமுதாயம் இன்று வலுவிழந்த பலவீனமான ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ஒருபக்கம் தொழிநுட்ப சாதனங்களில் பொழுதை கழிப்பதால் விளையாட்டுக்களுக்கு அவசியப்பாடு ஏற்படுவதில்லை. இதனால் உடலும் உள்ளமும் ஒருவகையான இறுக்கமான நிலைக்குள் தள்ளப்பட்டு அது சோம்பேறித்தனத்தையும் ஆர்வமின்மையையும் ஏற்படுத்துகின்றது.
மறுபுறத்தால் இன்றைய இளைஞர்களுக்குள் புகுந்திருக்கும் போதைப்பொருள் பாவனை. இது உடல்ரீதியான பலவீனத்தை மட்டுமன்றி சிந்தனாரீதியான மந்த நிலையையும் ஏற்படுத்துகின்றது. சமுதாயரீதியான நோக்கங்கள் இலக்குகளோடு பயணிக்கவேண்டிய இளைஞர்களை இந்த போதைப்பொருட்கள் ஒருவகையான கனவுலகிற்குள் தள்ளிவிட்டு எதிர்காலத்தை காவுகொள்கின்றன.
இளமைப் பருவம் என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இதைப்பற்றி பிரத்தியேகமாகவே மறுமையில் கேள்வி கணக்குகள் இருக்கின்றன. சிறுவயதில் இருந்தே நமது பிள்ளைகளுக்கு உடல்ரீதியான பேணுதலை ஆர்வமூட்டி வளர்ப்பது அவசியம். உடற்பயிற்சி, தற்காப்புக்கலை என்பன இப்போது சமூகத்தில் அருகிவருகின்ற துறைகளாக மாறிவிட்டன.
ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய இளமைப்பருவத்தில் ஏதாவது ஒரு விளையாட்டோடு தொடர்புற்றவனாக இருப்பது அவசியம். அதிலும் தற்காப்புக்கலை சார்ந்த விளையாட்டுக்கள் மிகவும் அவசியம்.