மாணவர்களுக்கு பெரும் சுமைகளை உடைய பாடத்திட்டம் தரம் 5ல் தொடங்கி தரம் 6 – 9 வரை 12 பாடங்களும், தரம் 10 – 11 இல் 9 பாடங்களும் அதிகரித்த அலகுகளும் மாணவர்களை புத்தகப் பூச்சிகளாக மாற்றி விடுகின்றன.
இவ்வாறு அதிகரித்த அலகுகளைக் கொண்ட கல்வித்திட்டம் சாதாணதரம் ஒருகோணத்திலும், உயர்தரம் ஒரு கோணத்திலும் சென்று பின் பல்கலையில் கற்ற கல்வியும் ஒரு திசையில் சென்று வைத்திய பொறியியல், கணக்கீடு தவிர்ந்த துறைகள் எங்கேயோ போய் முடிகின்றன. கலைத்துறையின் நிலையோ கவலைக்கிடமாக மாற்றம் பெறும் நிலையில் உள்ளது. சாதாரண தரம் கற்ற மாணவர்களின் நிலை அவர்களின் தொழிலுக்கான அறிவுத்தாகத்தை எந்தளவு நிறைவேற்றுகின்றது என்பது கேள்விக்குறியே. அதாவது இலங்கையின் கல்வித்திட்டம் குறிப்பிட்ட துறைகள் தவிர்ந்து துறைசார் விற்பன்னர்களை உருவாக்கத் தவறுகின்றது. அதன் விளைவுதான் டூத்பிக்கு, ரிசு பேப்பர் கூட இன்று இலங்கை இறக்குமதி செய்யும் அளவுக்கு உற்பத்தித்திறன் குறைவடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
வளர்ந்த நாடுகளில் இளம் பராயத்திலேயே சுமார் 14 வயதில் அவரவர் தனது துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறையில் பயின்று தேறி உயர்நிலை தொழிநுட்பத்தை அடைகின்றனர்.
இதில் யாருடைய பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதை தோ.அ. எடிசனின் வாழ்க்கை வரலாறு தெளிவாக்குகின்றது.
எடிசனின் அதீத அறிவு காரணமாக அன்று பாடசாலை அவரை வீட்டு விரட்டி அனுப்பியபோது அவரது தாய் (அவர் ஒரு ஆசிரியர்) வீட்டில் வைத்து கல்வி கற்றுக்கொடுக்கின்றார். அவரது தகப்பன் வாசிப்பை ஊக்கப்படுத்தி எடிசனின் அறிவுக்கு வித்திட எடிசனும், தேடிக்கற்கின்றார் உயர்நிலையை அடைகின்றார். எனவே, இங்கு பெற்றாரின் பங்களிப்பும், மாணவனின் தேடலும் அறிவை பெருக்குன்றது.
ஆனால், இன்று பாடசாலைகள் 13 ஆண்டு உறுதியான கல்வியின் கீழ் சகலரையும் வைத்து இறுக்கமான மனநிலையிலும் மாணவனை அடக்கி, ஒடுக்கி புத்தகப் பூச்சிகளாக மாற்றி அறிவை விருத்தி செய்வதை காணமுடிகின்றது. அவ்வாறன்றி வளர்ந்த நாடுகளில் புகட்டப்படும் துறைசார் கல்வித்திட்டத்திற்கு மாணவர்களை மாற்ற வேண்டிய தேவையுள்ளது.
அப்போதுதான் திறன், திறமை, தேர்ச்சிபெற்ற வைத்திய, பொறியியலாளர், மேசன், தச்சர், மீன்பிடிசார், விவசாயம்சார், கண்டுபிடிப்பாளர், விஞ்ஞானி என பலரை உருவாக்க முடியும்.
எனவே மாணவர்களை அவர்களின் திறமைகளை இளம்பராயத்திலேயே அடையாளம் கண்டு அவர்களின் துறைகளை இனங்காணவேண்டும். அத்துறையில் அவர்களை பயிற்றுவித்து தேர்ச்சிமிக்கவர்களாக உருவாக்க வேண்டும். பெற்றாரின் வழிகாட்டல் ஆசிரியர்களின் அடையாளம் காணல் திறன் இங்கு செல்வாக்கு செலுத்த வேண்டும்.
மாறாக அவர்களை திணிக்கும் கல்வித்திட்டமும் வகுப்பில் உள்ள 30 மாணவர்களும் எல்லா பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களாக மாற வேண்டும் என்ற சிந்தனையும் இயற்கைக்கு முரணாகதாகும். இயற்கை சமனிலையை பேணவேண்டுமாயின் விவசாயி தச்சர் கொத்தன் உற்பத்தியாளன் தொழிலாளி மேய்ப்பாளன் அதிகாரிகள் என பல துறைகளிலும் மனிதர்கள் ஈடுபடவேண்டும். அவ்வாறில்லாமல் மொத்த மனிதர்களும் ஒரே துறையில் இருந்து எந்த பயனுமில்லை. அந்த வகையில்தான் இறைவனும் மனிதர்களை அறிவு கூடியவர்கள் நடுத்தர அறிவுள்ளவர்கள் குறைந்தவர்கள் என பல வகையிலும் உலக கல்வித்துறையில் ஆக்கியுள்ளான். அது இயற்கையின் நியதி படிப்பில் உயராதவர்கள் கஷ்டப்படுவதில்லையே. அவர்களும் படிப்பில் உயர்ந்தவர்களைவிட மிகவும் நல்ல நிலையில் சம்பாத்தியம் செய்து வாழ்வதை நாம் காணலாம். விவசாயி தச்சர் கொல்லன் மீன்வியாபாரம் என அனைத்து துறைகளிலும் சிறந்த வாழ்க்கையை கொண்டு நடாத்துவதை காணலாம். கடலில் மீன்பிடிப்பவன், விவசாயி, மரக்கறி உற்பத்தியாளர் என இல்லாவிட்டால் எவ்வாறு இயங்கும் இந்த உலகம்?
அதற்காக மாணவர்களை பாடசாலையை விட்டு வீட்டுக்கு அனுப்பத்தேவையில்லை. அவர்களின் திறமைக்கு ஏற்ற களமாக பாடசாலைக் கல்வி மாற்றப்படவேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.
அன்று பாடசாலை எடிசனை வீட்டுக்கு அனுப்பவில்லையாயின் எடிசன் உருவாகி இருக்க மாட்டார் பாடசாலயில் உருகியிருப்பார்.