• Sun. Oct 12th, 2025

6000 பேரை தோற்கடித்து, சர்வதேச சம்பியனாகிய லபீத் அஹமத்

Byadmin

Jan 16, 2019

(6000 பேரை தோற்கடித்து, சர்வதேச சம்பியனாகிய லபீத் அஹமத்)

முஹம்மது ரகீஸ் லபீத் அஹமத் அவர்கள் அக்கரைப்பற்று நான்காம் குறிச்சியைச் சேர்ந்தவர். வயது-09. M.I. நஸ்ரின் – M.A.M. ரகீஸ் தம்பதிகளின் இரண்டாவது புதல்வரான இவர், அக்கரைப்பற்று அல்-முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-4 இல் கற்கின்றார்.
இவர், மலேசியா நாட்டில் Universiti Tenaga Nasional (UNITEN) இல் 2018 டிசம்பர் 9, 10 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச UCMAS (Universal Concept of Mental Arithmetic System) மன எண் கணிதப் போட்டியில் 130 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 6000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்களை பின்தள்ளி செம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார்.
2018 ஒக்டோபர் மாதம் தேசிய மட்ட போட்டிப் பரீட்சை இலங்கையில் இடம்பெற்றது. அதில் செம்பியன் பட்டத்தை வென்றதன் பின்னரே சர்வதேசப் போட்டிக்கு இவர் தகுதிபெற்றார்.
கடந்த மூன்று வருடங்களாக அக்கரைப்பற்று சார்க் கிட்ஸ் (Sarc Kids) நிறுவனத்திலே விஷேட கணித பயிற்சிநெறி ஒன்றை தொடர்ந்து வருகின்றார் லபீத். ஒக்டோபரில் இடம்பெற்ற தேசிய மட்ட UCMAS போட்டிக்கு அதன் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி சித்ரா இளமைநாதன் அவர்கள் இவரை விசேடமாக பயிற்றுவித்தார். திருமதி பஸ்லியா நியாஸ் அவர்கள் UCMAS சர்வதேச போட்டிக்காக இவரை பிரத்தியேகமாக கரிசனையுடன் தயார் படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றனர்.
“பரீட்சையில் எட்டு நிமிட எழுத்துமூல கணித பரீட்சையை செய்ய வேண்டும், இதில் 200 கணித வினாக்கள் காணப்படும். இந்த குறுகிய நேரத்தில் லபீத் 197 அல்லது 198 கணித வினாக்களை பூர்த்தி செய்துள்ளார். ஒரு வினாவுக்குரிய புள்ளி 10 ஆகும். சர்வதேச செம்பியனாக வரவேண்டுமாயின் குறைந்தது 1,700 புள்ளிகளைப் பெற வேண்டும். இவ்வாறு நோக்குமிடத்து, எனது மகன் 1,970 புள்ளிகள் பெற்றிருப்பார். இதனால்தான் இவர் சர்வதேச செம்பியனாக சாதனை புரிந்திருக்கின்றார்.” என்று மிகுந்த மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார் விவசாயத்துக்கு தேவையான பொருட்களை விற்பனைசெய்துவரும் அவரது தந்தை ரகீஸ் அவர்கள்.
கடந்தகால மாதிரி வினாப் பயிற்சி மேற்கொள்ளல்கள், அதிக நேர தொடர் பயிற்சிகள், தாயுடனான சில கட்டளை சார்ந்த உடன்பாடுகள் (குறித்த நேரத்திற்குள் இத்தனை கணக்குகளை செய்தால் தன்னை விளையாட அனுமதிக்க வேண்டும், போன்றவை). தினமும் அரை மணிநேர வினாப் பயிற்சி, தொலைபேசியில் Stop Watch வசதிமூலம் சரிபார்த்து தன்னை முழுமையாக இவர் ஆயத்தம் செய்துள்ளார்.
“பரீட்சை பயத்துடனேயே மலேஷியாவில் இடம்பெற்ற 23 ஆவது சர்வதேசப் போட்டிக்கு மகன் சென்றார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முதலிடம் பெற்றதும், இலங்கை திருநாட்டின் தேசிய கொடியைப் போர்த்தித்தான் லபீத்துக்கு செம்பியன் கிண்ணம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நாடு இவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது” தந்தை என்றவகையில் தனக்கு மிகுந்த வேதனையாக இருப்பதாக தந்தை ரகீஸ் அவர்கள் தெரிவிக்கின்றார்.
“UCMAS – மன எண் கணித முறை என்பது மூளையின் செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் ஒரு பயிற்சி. இது எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படவேண்டும். இந்தப் பயிற்சிநெறியின் ஆரம்பத்தில் இரு கைகளாலும் (வலது, இடது) எழுதப் பழக்குவார்கள். இருகைககளும் வேலை செய்கின்றபோழுது வலது, இடது மூளைகள் சுறுசுறுப்பாக செயற்படுகின்றது. இதன்பின்னர், தேவையான கருவிகளை (Tools) கொடுத்து பயிற்சி ஆரம்பிக்கப்படுகின்றது. இறுதியாக, உள்ளத்தால் கணக்கை உள்வாங்கி கைகளால் அவற்றை வெளிப்படுத்த பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.” என இவரது தந்தை தெரிவிக்கின்றார்.
சீனா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மாணவர்களுக்கு இப் பயிற்சி தொடராக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் சிக்கலான கணிப்புக்களை அவர்களால் எளிதாக தீர்க்கவும் முடிகின்றது.
“அல்ஹம்துலில்லாஹ், எனது வெற்றிக்கு முதல் காரணம் இறைவன். அடுத்து, பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள், பஸ்லியா ஆசிரியை, திருமதி சித்ரா இளமனாதன், குடும்ப உறவுகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி” தெரிவிக்கின்றார் லபீத்.
அண்மையில் மீள்பார்வை பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மஹீஸ் அவர்கள், முஸ்லிம்களின் கல்விமுறை இன்று பிழையான வழியில் சென்று கொண்டிருப்பதாகவும், ஆண் பிள்ளைகள் இன்று தொழில்நுட்ப கல்வியின் பின்னால் செல்கிறார்கள், அறிவுரீதியான கல்வியே எமக்கு தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்தில் கல்விக்குரிய பெறுமதி வழங்கப்படுவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில், லபீத் போன்ற மாணவர்களின் சாதனை, சமூகத்தின் விடிவு நோக்கிய நம்பிக்கையையே எமக்கு ஊட்டுகின்றன. ஆனால், அதற்கு முஹம்மது ரகீஸ் போன்ற கரிசனைமிக்க தந்தையர்களும், திருமதி நஸ்ரின் போன்ற அர்ப்பணிப்புமிகு தாய்மார்களும் எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.
மகனின் சர்வதேச ரீதியான சாதனைக்கு ஜனாதிபதியின் அங்கீகார விருதொன்றை எதிர்பார்த்து, ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் எழுத்துமூல கடிதம் அனுப்பிவிட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் லபீத் அஹமதின் பெற்றோர்.

– அனஸ் அப்பாஸ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *