• Sat. Oct 11th, 2025

ஒழிக்கப்பட வேண்டிய, பகடிவதை எனும் காட்டுமிராண்டித்தனம் – சவூதி பல்கலைக்கழகங்களின் முன்மாதிரி

Byadmin

Feb 25, 2019

(ஒழிக்கப்பட வேண்டிய, பகடிவதை எனும் காட்டுமிராண்டித்தனம் – சவூதி பல்கலைக்கழகங்களின் முன்மாதிரி)

ஒரு சமூகத்தின் அல்லது தேசத்தின் முதுகெலும்பாக அறிஞர்கள் விளங்குகின்றனர். அவ்வாறானவர்களை உருவாக்கும் தளங்களில் மிக முக்கியமான இடத்தைப் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ளன. எனவே பல்கலைக்கழகங்கள் துறைசார்ந்தவர்களை தேசத்திற்கு வழங்குவதில் கவனம் செலுத்துவது போன்று மனிதாபிமானமும் நல்லொழுக்கமுள்ளவர்களாக அவர்களை உருவாக்குவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சில ஆசிய நாட்டு பல்கலைக்கழகங்கள் இது விடயத்தில் மிகுந்த பின்னடைவு நிலையிலிருப்பதை கடந்த கால நிகழ்வுகள் மிகத் துல்லியமாக படம்பிடித்து காட்டுகின்றன. பகடிவதை எனும் பெயரில் அரங்கேறும் காட்டுமிராண்டித்தனம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
பகடிவதையை நியாயப்படுத்த சொல்லப்படும் காரணிகள் ஏரெடுத்தும் பார்க்க முடியாதளவு மிக பலவீனமானவையாகும். ஆச்சயமென்னவெனில் பல்லாயிரக்கணக்கான புத்திஜீவிகளைக் கொண்ட இந்நாடுகள் இக்காட்டுமிராண்டித்தமான செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியாமல் திணறுவதாகும்.
புதிய மாணவர்களுக்கு மத்தியிலிருக்கும் வெட்கம், அறிமுகமின்மை அவர்களது கற்றல் ஏனைய நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதை களைவதே பகடிவதை உருவாக்கப்பட்டதன் நோக்கமென பல புத்திஜீவிகள் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் அவர்களும் மாணவர்கள் மத்தியில் புரிந்தணர்வை ஏற்படுத்த இது தான் வழி என்பது போன்று அதை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் முன் வைக்கும் இந்நியாயமானது போலியானதும், மடத்தனமுமானதாகும்.
நான் தற்போது கல்வி கற்கும் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 170 நாடுகளைச் சேர்ந்த, ஷரீஆ மற்றும் அறிவியல் பீடங்களில் கற்கும் 30, 000 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 
ஆனால் எந்த மாணவனும் தனது கற்றல் நடவடிக்கைகளையோ வேறு எந்த விடயங்களையோ கண்ணியமாகவும், சகோதரத்துவத்துடனும் நிறைவேற்றுக் கொள்வதில் எந்த சிரமத்தையும் எதிர் கொள்வதில்லை. இதே நிலைதான் சவூதி அரேபியாவின் ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களின் நிலையும். சில சவூதி பல்கலைக்கழகங்களின் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை விட அதிகமாகவும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் பகடிவதை எனும் பேச்சுக்கே இங்கு இடமில்லை. 
பல கலாசாரங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான நடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்தியில் புரிந்தணர்வை ஏற்படுத்த பகடிவதை போன்ற முட்டாள்தனமான ஒரு விடயம் அனுவளவும் தேவைப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வாறிருக்க ஒரே தேசத்தை சேர்ந்த மாணவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்த இதன் தேவை கிடையவே கிடையாது.
இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் நொண்டிக்காரணிகளை சொல்லி காலம் கடத்தாமல் ஒரு ஒழுக்கமுள்ள, மனிதாபிமானம் நிறைந்த பல்கலைக்கழகங்களாக எமது பல்கலைக்கழகங்கள் மாற்றம் பெற வேண்டும். பகடிவதை எனும் காட்டுமிராண்டி த்தனம் வேரோடழிக்கப்பட வேண்டும். அதற்கான முறையான திட்டங்களை வகுத்து செயற்பட வேண்டும். அரசியல் தலைமைகள் இது விடயத்தில் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்க வேண்டும். தற்போது நமது நாட்டின் உயர்கல்வி அமைச்சராக இருப்பவர் ஒரு முஸ்லிம் என்ற வகையில் இவ்வக்கிரமத்தை அழிக்க முயலுவது அவர் மீதுள்ள சன்மார்க்க கடமையுமாகும்.
ஒழுக்கமற்றவன் கரடிக்கு சமம் என்றார் ஒரு அரபிக் கவிஞன். அவ்வாறானால் மனிதாபிமானமற்றவர்களை என்னவென்பது???  அவ்வாரானவர்களிடம் எதிர் காலத்தில் ஒப்படைக்கப்படும் தேசத்தின் வளங்கள் முறையாக கையாளப்படும் அல்லது பாதுகாக்கப்படும் என்பதை உத்தரவாதப்படுத்தலாமா????
அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள்பாலிப்பானாக!
A.M.MUHSIN (Mawahibi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *