Written by his son, Muath Mubarak –
அக்டோபர் 27 என்பது இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான எனது பெருமதிப்பிற்குரிய தந்தை அஷ்ஷேஹ் முகமது மக்தூம் அகமது முபாரக் அல்-மதனி (ரஹிமீஹல்லாஹ்) அவர்கள் இறையடி சேர்ந்த திகதியாகும்.
தேசத்தை பொறுத்தமட்டில், அவர் ஒரு மரியாதைக்குரிய ஆசிரியர், கல்லூரி முதல்வர், அறிஞர் மற்றும் ஒரு போற்றமிகு சமூகத் தலைவராக இருந்தார். என்னைப் பெறுத்த வகையில், தனது ஒவ்வொரு செயலும் பணிவு, சேவை மற்றும் நம்பிக்கையின் பாடத்தை கற்றுத் தந்த ஒரு பாசமிக்க தகப்பன் ஆவார்.
மல்வானை முதல் மதீனா வரை
1949 ஆம் ஆண்டு மல்வானையில் ஒரு மார்க்கப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்த எனது தந்தை முபாரக், இஸ்லாமிய வழிநடத்தல் மற்றும் சமூக நலனுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சூழலில் வளர்ந்தார். இளம் வயதிலேயே குர்ஆனை ஓதக்கற்பது முதல் பல இஸ்லாமிய கலைகளை இலங்கையில் ஷேஹ் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லா அல் பாஸ் (ரஹிமஹல்லாஹ்) அவர்கள் உட்பட பல தலை சிறந்த உலமாக்களிடமிருந்து கற்கும் அரிய வாய்ப்பை அவர் பெற்றார்.
இந்த பாக்கியம் அவரை 1978 ஆம் ஆண்டு நமது இனிய இறைத்தூதர் (ஸல்) அன்னவர்கள் துயில் கொண்டுள்ள மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவது வரை இட்டுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையின் பேரில், தாவா, கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க எனது தந்தை இலங்கைக்குத் திரும்பினார்.
அது முதல் அரை நூற்றாண்டு காலமாக எனது அருமைத் தந்தை பல்வேறுபட்ட மகுடங்களை அணிந்துள்ளார்.
மஹரகம கஃபூரியா அரபுக் கல்லூரியின் முதல்வராக 32 ஆண்டுகளும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் (ACJU) தலைவராகவும் பின்னர் அதன் பொதுச் செயலாளராகவும் அவர் தனது இறுதிக் காலம் வரை பணியாற்றியதோடு பல இஸ்லாமிய வங்கிகள் மற்றும் இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கான ஷரியா ஆலோசகராகவும் ஜாமியா நளீமியாவின் விரிவுரையாளராகவும் பல மஸ்ஜிதுகளின் அறங்காவலராகவும் அவர் பங்களிப்புச் செய்தார்.
இவை தவிர பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஷரியா வரையரை’ என்ற வானொலி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் செயலாற்றிய எனது தந்தை பல சர்வதேச அமைப்புகளை இலங்கைக்காக பிரதிநிதித்துவம் செய்தார்.
அது மட்டுமன்றி ஜனாஸா, ஹஜ், இத்தா மற்றும் சமகால சவால்கள் குறித்த புத்தகங்களையும் எழுதிய அவர் நூற்றுக்கணக்கான ஜூம்மா பிரசங்க ஸ்கிரிப்டுகள் மற்றும் அறிவார்ந்த எழுத்துக்களை வரைந்துள்ளார்.
இன்று இலங்கை முஸ்லிம் சமூகத்தை வடிவமைக்கும் அரபுக் கல்லூரிகளின் கல்வி சீர்திருத்தங்கள், இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரிக பாடத்திட்டங்கள், நிதி நிறுவன மற்றும் சமூகத் திட்டங்கள் ஆகியவற்றிலும் அவரது முத்திரையைக் காணலாம்.
ஆனாலும் இந்த புகழ்பெற்ற பொது நபருக்குப் பின்னால் எனக்குத் தெரிந்த ஒரு சாதாரண மனிதரும் இருந்தார். அவர் யார் என்பதன் உண்மையான சாரத்தைப் படம்பிடித்துக் காட்டும், எனது சிறு முதல் இளம் பிராய காலத்தின் சில அரிய நினைவுகளைப் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
சைக்கிள் பயணங்கள்
கல்லூரியின் காலை நேர கூட்டத்திற்கு எனது தந்தை தவறாமல் வருவார் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அதற்காக அவர் வாரத்தில் 5 நாட்கள் சுமார் 50 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தார் என்பதை அறியாதவர்கள் இருக்கலாம். இது தனது கடமைகளில் அவருக்கு இருந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சிறு உதாரணமாகும்.
அப்போது நான் ஒரு வாலிபனாக இருந்ததோடு எனது தந்தையை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்தி பஸ் தரிப்பிடம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் அழைத்து வருவேன்.
உலகம் போற்றிய அந்த மாமேதை மிக அசௌகரியத்துடன, ஆனால் அமைதியாக பின்னால் அமர்ந்திருப்பார். அதே போல இரவில் வீடு திரும்பும் போதும் நான் மீண்டும் பஸ் நிலையத்திற்குச் சென்று அவரை வீடு வரை சைக்கிளில் வைத்து ஓட்டி வருவேன்.
இதன் போது அவர் கஃபூரியாவின் முதல்வராகவும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவராகவும், பல நிதி நிறுவனங்களுக்கு ஷரியா ஆலோசகராகவும் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பதிவிகள் இருந்த போதிலும், தனது இளம் மகனுக்குப் பின்னால் சைக்கிளில் பயணம் செய்வதில் அவர் திருப்தி அடைந்தார். உண்மையான மகத்துவம் பணிவாலேயே வரையறுக்கப்படுகின்றது என்பதற்கான உயிருள்ள உதாரணமாக எனது தந்தை திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
சோதனை தருணத்தில் வலிமை
எனது ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு சமயத்தில், என் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. அந்தக் கடினமான நாட்களில், என் தந்தை தொடர்ந்து என்னுடன் இருந்து ஊக்கமளித்து வந்தார்.
அந்த நாட்களை இன்றும் என்னால் தெளிவாக கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. அவர் என் மருத்துவமனை படுக்கைக்கு அருகில் அமர்ந்து, மிக அக்கறையாக என்னை கவனித்துக் கொண்டதுடன் வெள்ளிக்கிழமை ஜூம்மா குத்பா போன்ற கடமைகளையும் செய்து வந்தார்.
சமூகப் பிரச்சினைகளையும் கையடக்க தொலைபேசி மூலம் தீர்த்து வந்தார். இப்படியாக சமூகக் கடமை மற்றும் குடும்பப் கடமைகளை சமமாக நிறைவேற்றி வந்தார்.
பொது இடங்களில் உரையாற்றும் விதத்தை எனக்குக் கற்றுத் தந்தவரும் எனது தந்தையே. அவர் மிகப்பொறுமையாக எனக்கு சொற்பொழிவின் அரிச்சுவடியை கற்றுத் தந்தார். வானொலியில் எனது முதலாவது உரையை நிகழ்த்த அவர் என்னை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போதிருந்து, ஆயிரக்கணக்கான வானொலி சொற்பொழிவுகளை வழங்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவை ஒவ்வொன்றும் எனது தந்தை எனக்குள் வளர்த்த குரலின் பிரதிபலிப்பென்றே நான் கருதுகின்றேன்.
அவரது முன்மாதிரியின் மூலம், தலைமைத்துவம் என்பது பட்டங்கள் அல்லது பதவிகள் மூலம் மட்டுமல்ல, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பெருமானங்கள், தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நேசம் ஆகியவற்றின் அமைதியான பரிமாற்றத்தின் மூலமும் பெறப்படுகின்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
உண்மையான சமூகத் தலைமை, குளிரூட்டப்படட மூடிய அறைகளில் நடைபெறும் பணிப்பாளர் கூட்டங்களிலோ அல்லது மேடைகளிலோ தொடங்குவதில்லை, மாறாக வீட்டில் காட்டப்படும் எளிமையான, உறுதியான அன்பில் தொடங்குகின்றது என்பதை நான் என் தந்தை மூலம் புரிந்துகொண்டேன்.
கல்வி என்பது ஸதகதுல் ஜாரியாவாகும்
நான் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சி பெற்றபோது, என் தந்தை தனது தனித்துவமான பாணியில் அதை கொண்டாடினார். எனது பெறுபேறு அட்டையின் பிரதிகளை அச்சிட்டு அதை பாடசாலை முழுவதும் பங்கிட்டார். அதில் அறிவு என்பது ஸதகதுல் ஜாரியாவின் ஒரு வடிவம் என்பதை வலியுறுத்தும் ஒரு நபிமொழியையும் அவர் சேர்த்தார்.
அவரை பொறுத்த மட்டில் வெற்றி என்பது ஒருபோதும் ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல, மாறாக அது பகிரப்பட வேண்டிய ஒரு அருளும், சமூகத்தை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரு வழிமுறையுமே ஆகும்.
என்னை மட்டுமல்ல உதவி தேவைப்படும் ஏனைய பலரையும் எனது தந்தை ஊக்குவித்தும் உதவிகள் செய்தும் வந்தார். சிறப்புத் துறைகளில் முதுமானிப் பட்டம் பெற்றவர்களுக்குக் கூட, அப்பட்டத்திற்குப் பின்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் வாழ்நாள் முழுவதும் படிப்பதன் மூலம் தங்கள் அறிவுசார் பயணத்தைத் தொடரல் விடயத்தில் அவர் வலியுறுத்தினார். அவருக்கு, அறிவைத் தேடுவது ஒரு புனிதமான, முடிவில்லாத முயற்சியாகவே இருந்தது எனலாம்.
ரமழான் மற்றும் ஹஜ் பெருநாட்களில் ஏதேனும் ஒரு மைதானத்தில் நடைபெறும் ஈத் தொழுகையில் பங்கேற்பதை வழமையாக்கியிருந்த எனது தந்தை அதன் பின் எங்களுடன் உறவினர்களை சந்திக்கச் செல்வார்.
அந்த உறவினர்களின் உறவு முறைகளையும் பொறுமையாக எங்களுக்கு விளக்கி இரத்த உறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் குர்ஆன் வசனங்களையும் ஓதிக்காட்டுவார். இவ்வாறு உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் குடும்பப் பிணைப்புகள் மற்றும் இரத்த உறவின் முக்கியத்துவத்தை அவர் எங்களில் விதைத்தார். நாங்களும் அதன் பின் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு மிக முக்கியத்துவம் தருபவர்களாக ஆனோம்.
இலங்கையில் முதன்முறையாக, ஈத் பண்டிகைக்கு சந்திரனைப் பார்ப்பது தொடர்பான பிரச்சினைக்கு இறுதி முடிவைப் பெற்ற வரலாற்று நிகழ்வு ஒரு நாள் பதிவாகியது. அதன் போது, சமூகத்திற்கான ஒற்றுமை மற்றும் தெளிவை உறுதி செய்யும் தீவிர விவாதங்கள் மற்றும் சிக்கலான பரிசீலனைகளை என் தந்தை வழிநடத்தியதை நான் கண்டேன். அதன் போது தீர்க்கமான, அதே சமயம் விட்டுக்கொடுக்கும் தன்மையுள்ள மற்றும் கொள்கையை அடித்தளமாக கொண்டு நோக்கத்தால் இயக்கப்படும் தலைமைத்துவத்தின் உண்மையான முக்கியத்துவம் எனக்கு நன்கு புரிந்தது.
கவலையிலும் கண்ணியம் பேணல்
என் தந்தை தனது பெற்றோர்கள் இருவரையும் இழந்தபோது, அவர் அந்தக் கவலையை அமைதி மற்றும பொறுமையுடன் ஏற்று அல்லாஹ்வின் முடிவை பொருந்திக் கொண்டமையை நான் கண்டேன். உண்மையான ஸப்ர் (பொறுமை) என்பது துக்கம் இல்லாமை அல்ல, மாறாக அதன் போதும் உறுதியான இறை நம்பிக்கையுடன் செயல் படுவதே என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
தமது பெற்றோரின் பெயர்களில் ஸதகா ஜாரியா கருமங்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் நினைவை அவர பேணினார். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை முழுமையாக ஏற்பது பற்றியும் அவற்றின் தவிர்க்க முடியாத தன்மை பற்றியும் அன்புக்குரியவர்களுக்கு தொடர் நன்மைகள் மூலம் உதவுவது மற்றும் அஞ்சலி செலுத்தக்கூடிய வழிகள் பற்றியும் எமக்கு அவர் கற்றுக் கொடுத்தார்.
இந்த நினைவுகளும் பாடங்களுமே எனது உண்மையான சொத்துக்கள் ஆகும். ‘நான் உங்களுக்காக இந்த உலக வஸ்துக்களை சம்பாதிக்கவில்லை. மாறாக, மக்களையே சம்பாதித்துள்ளேன். என்று எனது தந்தை அடிக்கடி கூறுவதுண்டு. அதற்கு ஒப்ப நான் எங்கு பயணம் செய்தாலும், என் அன்பான தந்தையை அறிந்த, அவரிடம் கல்வி கற்ற, அவருடன் நெருங்கிப் பழகியவர்களை சந்திக்கிறேன்.
பணிவு, அனைவரையும் சமமாக மதிப்பது, தாராளம், உறவுமுறையை பேணல் மற்றும் பொறுமை போன்ற அவர் போற்றி வந்த பெருமானங்களுக்கு இந்த மனிதர்களே சான்றாவார்கள்.
இந்த குணங்களே பொது வாழ்க்கையில் எனது தந்தையை வேறு படுத்திக் காட்டின. முக்கியமான சமூக விடயங்களைப் பற்றிப் பேசும் போதும், இஸ்லாமிய கல்வி மற்றும் நிதி நிறுவனங்களை நெறிப்படுத்தும் போதும், பல தலைமுறைகளின் அறிஞர்களுக்கு வழிகாட்டிய போதும் மேற்படி குணாதிசயங்களே அவரை வழி நடத்தின.
ஷேஹ் முபாரக்கின் தாக்கம் அவரது சொந்த வாழ்நாளோடு நின்றுவிடவில்லை. அவரது தலைமை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையை தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய அமைப்பாக உருவாக உதவியது.
அத்துடன் அவரது ஆலோசனைகள் இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துரையின் அடித்தளத்தை வடிவமைத்தது. பண்டாரவெலையில் உள்ள மஸ்ஜிதுகள் முதல் சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாநாடுகள் வரை அவரது சொற்பொழிவுகள் ஆயிரக்கணக்கானோரை உணர்வூட்டியது.
‘ஷரியா வரையரை’ வானொலி நிகழ்ச்சியின் மூலம் அவரது குரல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கை முழுவதுமுள்ள வீடுகளில் ஒலித்தது.
மேலும் அவரது இறுதி நாட்களில் கூட, அவர் 100 இலங்கை முஸ்லிம் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார்.
அவரது இந்த ஆக்கத்தை 2022 ஆண்டில் மேம்படுத்திய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ‘ஸெரண்டிப் கண்ட சான்றோர்கள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
2020 அக்டோபர் 27 அன்று, மாலை சுமார் 4:35 மணியளவில் எனது அருமைத் தந்தை அல்லாஹ்விடம் சென்றார். கொழும்பு குப்பியாவத்த முஸ்லிம் அடக்கஸ்தலத்திலேயே அவர் துயில் கொண்டுள்ளார்.
தமது நூட்கள், தான் வழிநடத்திய நிறுவனங்கள் மற்றும் உருவாக்கிய மாணவர்களை மட்டுமல்ல, தனது பெருமானங்களை முன்னெடுத்துச் செல்ல பாடுபடும் ஒரு குடும்பத்தையும் அவர் விட்டுச் சென்றுள்ளார்.
அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க வேண்டும் என பிரார்த்தித்தவனாக, அவரது வாழ்நாள் சேவையை ஸதகதுல் ஜாரியாவாக முன்னெடுத்துச் செல்லவும், அவரது அடிச்சுவடுகளில் நடக்கவும் உதவுமாறும் நான் ஏக வல்லவனிடம் பிரார்த்திக்கிறேன்.
என் தந்தையின் நினைவை வரலாற்றின் ஒரு பதிவாக மட்டுமல்லாமல், பணிவுடன் வாழ்வது, நம்பிக்கையையும் கடமையையும் சமநிலைப்படுத்துவது, குடும்ப உறவுகளைப் பேணுவது, பொதுச் சேவைக்கு தன்னை அர்ப்பணிப்பது போன்ற உயரிய அம்சங்களுக்கான ஒரு அழைப்பாகவும் நான் இலங்கை வாழ் பரந்த முஸ்லிம் சமூகத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன். அதுவே அவரது மரபு. அந்த பாதையையே நானும் தொடர விரும்புகிறேன்.
‘ரப்பிர்ஹம்ஹமா காமா ரப்ப யானி ஸகீரா’