(“எமது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு அதிகூடியளவு மத சுதந்திரம் வழங்கப்படும்” – கோட்டாபய ராஜபக்ச)
அண்மையில் கண்டி ,கெலிஓய பிரதேசத்தில் பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவு ஏற்பாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எலிய நிகழ்ச்சி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுஜன பெரமுன முஸ்லிம் பிரிவு அங்கத்தவர்கள் உரையாற்றியதை அடுத்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உரையாற்றினார்..
அதன்போது “அடுத்து அமையவுள்ள எமது அரசாங்கத்தில் இந்நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் இதற்கு முன்னர் இருந்ததை விடவும் அதிகூடியளவு மத சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்தார்”
இந்த நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் கௌரவமான முறையில் வாழக்கூடிய சூழலை இந்நாட்டில் ஏற்படுத்துவோம். இந்த அரசாங்கம் எம்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்துள்ளது.
கடந்த காலத்தில் இந்த நாட்டில் பாதாள உலகத்தை இல்லாமல் செய்து சமாதானத்தை ஏற்படுத்தும் போதும், ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதும் எம்மீது கதைகளைச் சோடித்து விட்டனர் எனவும் அவர் கூறினார்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 72 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினை, முஸ்லிம் மக்களின் பிரச்சினை என தொடர்ந்தும் கதைத்து வருகின்றோம். உண்மையில் பிரச்சினை இருப்பது, சிங்களவரா? தமிழரா? முஸ்லிமா? என்பதில் அல்ல.
மாறாக எமது நாட்டுப் பிரஜைகளுக்கு வாழ்வதற்குத் தேவையான பொருத்தமான வருமானம் இருக்கின்றதா? தமது பிள்ளைகளுக்கு படிப்பதற்கு சிறந்த பாடசாலை இருக்கின்றதா? தகுதியான தொழில் ஒன்று இருக்கின்றதா? சுகாதாரம இருக்கின்றதா? தான் வாழ்வதற்கு ஒரு வீடு மற்றும் சூழல் காணப்படுகின்றதா? என்பதுதான் உண்மையான பிரச்சினைகள் ஆகும். இவற்றுக்குத் தீர்வு காண்பதன் மூலமே மக்களின் பிரச்சினை தீரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.