-தியதலாவ, பதுளை மேலதிகம், பண்டாராவளை மேலதிக நிருபர்கள் –
ஸ்தம்பித்தது பண்டாரவளை நகர்
அப்புத்தளையில் அமையப்பெற்றுவரும் உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 28 ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரவளை நகரெங்கும் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தினால் பாதிப்படைந்த மக்களும் இத்திட்டத்திற்கான எதிரணியினரும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வர்த்தகர்கள் பண்டாரவளை நகரெங்கும் தமது வர்த்தக நிலையங்களை மூடியதுடன் பாடசாலைகள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
பதுளை, பண்டாரவளை, வெலிமடை, அட்டாம்பிட்டிய. பூனாகலை, அப்புத்தளை ஆகிய வீதிகளை மறித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கோஷங்களை எழுப்பியும் சுலோகங்களை ஏந்தியும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இவ்வெதிர்ப்பு நடவடிக்கையானது பெரும் பேரணியாக வியாபித்து பண்டாரவளை நகரை ஆக்கிரமித்திருந்தது.
இதனால் பொதுப்போக்குவரத்து, பொதுப்பணிகள் மற்றும் இயல்பு நடவடிக்கைகள் யாவும் முற்றாக ஸ்தம்பித்திருந்ததைக் காணமுடிந்தது.
பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,
உமா ஓயா திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுரங்கத்தினால் இன்றுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தாழிறங்கியுள்ளன. வியாபார நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் உட்பட ஏழாயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் கட்டிடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிணறுகள் அடங்கலாக நீர் நிலைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளன. அத்துடன் பண்டாரவளை பிரதேசம் அனைத்தும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. பண்டாரவளை, எல்ல, வெலிமடை, ஊவா பரணகம, ஹாலி எல ஆகிய பிரதேசங்களை சூழவுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மேற்குறித்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
தொடர்ச்சியாக எமது எதிர்ப்பை தெரிவித்த போதும் பலனில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் எந்தவித பதிலையும் தரவில்லை. எமது நியாயமான கோரிக்கைகளை நிராகரித்தும் புறக்கணித்துமே வருகின்றனர்.
அதன் காரணமாகவே பொது மக்களும் வர்த்தகர்களும் சிவில் அமைப்புக்களும் குறிப்பாக 18 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்களும் மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான எதிர்ப்பு பேரணியை இன்று (நேற்று) நடத்துகின்றோம்.
இனியும் எமக்கு உரிய தீர்வினை அரசு பெற்றுத்தராமலும், பாதிப்படைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்காமலும் இருந்தால் பாரிய விளைவுகளையும் சேதங்களையும் சந்திக்க நேரிடும் என தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலிறுத்தினர்.