அனைத்து தனியார் பேரூந்துகளிலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பேரூந்துகளில் பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பயணிகளுக்கான லக்கேஜ்களில் பொதிகளை வைக்கமுடியாது எனவும் தம்மிடமுள்ள கைப் பைகளை மாத்திரம் எடுத்துச்செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்தின் போது பின்பற்ற வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு தௌிவுப்படுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பயணிகள் கொண்டு செல்லும் பொதிகள் குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
வாகனத்தின் பின்புறத்தில் பயணப் பைகளை வைப்பதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தமக்கு அருகில் பயணிக்கும் பயணி குறித்தும், சந்தேகத்திற்கிடமாக பயணப்பைகள்குறித்தும் அவதானமாக இருக்குமாறு பயணிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை புகையிரங்களில் பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரதான புகையிரத நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் பயணிகளின் பயணப்பைகள் பரிசோதிக்கப்படுவதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
புகையிரத பயணங்களில் பயணிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.