• Sat. Oct 11th, 2025

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் இறுதி வாக்குமூலம்!

Byadmin

Jun 30, 2017 ,

“நான் வணிகவுலகில் வெற்றியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானதுதான். எப்படியிருந்தாலும் என்னுடைய பணிச்சுமைகளை எல்லாம் தாண்டி நானும் என் வாழ்க்கையில் ஒருசில மகிழ்ச்சியான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை என் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்தான் அறிந்துகொண்டேன். இதோ ! இந்த மரணத்தருவாயில், நோய்ப்படுக்கையில் படுத்துக்கொண்டு என் முழுவாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கும் இந்தத் தருணத்தில் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ், சொத்து, செல்வாக்கு எல்லாமே செல்லாக்காசாக, பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்பதை உளமார உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக – மிகஅருகில் உணர்கிறேன். வாழ்க்கையில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணத்தை ஈட்டிய பின், பணத்திற்குத் தொடர்பில்லாத – மனத்திற்குத் தொடர்புடைய சிலவற்றையும் சம்பாதிக்கத் தொடங்கவேண்டும் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அவை உறவாகவோ, நட்பாகவோ, கலையாகவோ, அறமாகவோ, நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அவைதான் வாழ்வில் மிகமிக இன்றியமையாதன என்பதை – காலங்கடந்து இப்போது நான் உணர்கிறேன்.

அதைவிட்டுப் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது, என் வாழ்க்கையை போல. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் அனைத்து மகிழ்ச்சியும் வெறும் மாயைகளே! நான் சம்பாதித்த பணம் எதையும் என்னுடன் கொண்டுபோக முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கின்றன.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்குச் செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை – உச்சத்தைத் தொட முயலுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும்தான் உள்ளது. உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரையும் வாங்கிகொள்ளுமாறு செய்யமுடியாது; முடியவே முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து, அதைப் பணத்தால் வாங்கமுடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கைதான். வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போதாவது வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.

நாம் நடித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் குடும்பத்தினருக்கு, பெற்றோர்க்கு, மனைவிக்கு, மக்களுக்கு, உறவினர்க்கு, நண்பர்களுக்கு, இயலாதவர்களுக்கு அன்பை வாரிவாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள். நேசியுங்கள். நேசித்துக்கொண்டே இருங்கள்”

மரணப்படுக்கையில்….

ஸ்டீவ் ஜாப்ஸ்..

Apple Inc., Founder U.S.A.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *