• Sat. Oct 11th, 2025

ராம்குமார் தற்கொலை வழக்கு! கேள்விகளுக்கு சிறைத்துறையின் ‘அதிர்ச்சி’ பதில்!

Byadmin

Jul 1, 2017

ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது.

இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறைக்குள்ளேயே ராம்குமார், மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு ஆகியவற்றில் புதைந்துள்ள சந்தேகக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.

இந்தச் சூழ்நிலையில், ராம்குமார் தற்கொலை வழக்கு குறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆர்டிஐ போராளியுமான பிரம்மா, தமிழக உள்துறைச் செயலாளர் அலுவலகத்துக்கு ஆர்டிஐ மூலம் கடந்த மே மாதம் கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அதில், தமிழகத்தில் உள்ள சிறைக்கைதிகளின் விவரம், கைதிகள் மரணமடைந்த விவரம், தற்கொலை செய்து கொண்ட கைதிகளின் பெயர்கள், மின்சாரம் தாக்கி இறந்த கைதிகளின் விவரம், சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இதில், சென்னை புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே பதிலளித்துள்ளது.

ராம்குமார் தொடர்பான கேள்விகளுக்கு சிறைத்துறை பதிலளிக்கவில்லை. இதனால் வழக்கறிஞர் பிரம்மா, மேல்முறையீடுசெய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரம்மா கூறுகையில், “தமிழகத்தில் உள்ள சிறைக்கைதிகளின் விவரம் குறித்து ஆர்டிஐ-யில் கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

சென்னை, புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது.

புழல் ஆண்கள் சிறை நிர்வாகம் ராம்குமார் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

பெண்கள் சிறையில் பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் நிர்மலா, சிறைக்குள் மறைத்து வைத்திருந்த மூக்குப்பொடி மற்றும் பான்பராக் ஆகியவை கண்டுப்பிடிக்கப்பட்டன.

இதனால் அவர், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆறு மாத ஊதிய உயர்வும் அவருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆச்சியம்மாள் என்ற கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பிடித்தம் செய்து, சிறைவாசியின் உறவினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பெரும்பாலான கேள்விகளுக்கு சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்கவில்லை என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *