மோசடியான முறையில் கஷ்டமான மாவட்டங்களுக்கு சென்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மணாவர்களின் பரீட்சை முடிவுகளை வெளியிடப் போவதில்லை என பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற இடமளிக்கும் பாடசாலை அதிபர்களை பணி இடைநீக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க போவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ. எம்.எஸ். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் கஷ்டமான பிரதேசங்களுக்கு சென்று உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய 69 மாணவர்கள் சிக்கியதாகவும் அவர்கள் பரீட்சையில் தோற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நான்கு அதிபர்களை பணி இடைநீக்கம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நுவரெலியா புனித சேவியர், புத்தளம் அல் ஹிலால், கஹாட்டகஸ்திகிலிய முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் அனுராதபுரம் சாஹிரா பாடசாலைகளின் அதிபர் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை தவிர மோசடியான முறையில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவும் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 8ம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளதுடன் மோசடியான முறையில் வேறு பிரதேசங்களில் பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகள் அது சம்பந்தமாக அறியத் தருமாறும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது