• Sun. Oct 12th, 2025

ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல – பசில்

Byadmin

Sep 18, 2019

(ஐ.தே.க சார்பில் எவர், களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல – பசில்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தருவாயிலேயே உள்ளது. 
தற்போது சின்னம் குறித்து முரண்பாடுகள் எழுந்திருந்தாலும்,  இரு தரப்பும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனவின் போஷகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். 
தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. ஐ.தே.க சார்பில் எவர் களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல. ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்காக சாத்தியக் கூறுகளும் காணப்படுகிறது, எவ்வாறாயினும் அவற்றை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதாக இருந்தால் தான் போட்டியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்று குறிப்பிடுவது வெறும் தேர்தல் பிரசாரமேயாகும். தற்போதைய ஜனாதிபதியும் இதனையே குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தார். ஆகவே இவ்விடயத்தில் மக்கள் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *