(“கொழும்பு மக்கள் தங்கள் வாக்குரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்”)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வாழ் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக முக்கிய
தேர்தலாக அமைவதால், அனைவரும் தமது வாக்குரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட முஸ்லிம் சம்மேளன அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கொழும்பு – மருதானை, ஸ்ரீல.பொ.பெ. அலுவலகத்தில், கொழும்பு மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, உவைஸ் ஹாஜியார் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
நாட்டில் தொடர்ச்சியாக தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நாட்டு மக்களுக்கு மிக முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.
வாக்களிக்கும் உரிமையுடைய அதிகமானோர், தமது பதிவுகளை இது வரையில் மேற்கொள்ளாமல் உள்ளனர். இந்த விடயத்தில் இவர்கள் ஏனோதானோ என அசட்டையாகவும் பொடுபோக்குத்தனமாகவும் நடந்து கொள்கின்றனர்.
தற்போது திருத்தம் செய்யப்பட்ட தேருநர் இடாப்புக்கள், கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேருநர் இடாப்புக்கள் தொடர்பிலான உரிமைக் கோரிக்கைகளை 19 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
எனவே, இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரப்பட்டியல்களைப் பரிசீலனை செய்து, அதில் புதிதாகச் சேர்க்கப்பட வேண்டியவர்கள், தமது உரிமைக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும்.
வாக்களிக்கத் தகுதியுடையவர்களில் பெரும்பாலானவர்கள் குறித்த உரிமைக் கோரிக்கைகளை இதுவரையில் சமர்ப்பிக்காமல் உள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், வாக்களிக்கும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த உரிமைக் கோரிக்கைகளை மக்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியல் பிரதி நிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஆர்வம் முஸ்லிம் சமூகத்திடம் காணப்பட்ட போதிலும், வாக்காளர் இடாப்பில் தமது பெயர்களைப் பதிந்துகொள்ளும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. எனவே, அனைத்து மக்களும் குறிப்பாக கொழும்பு வாழ் மக்கள் ஆர்வத்துடன் சென்று, தமது வாக்களிக்கும் உரிமைப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.