(சஜித்தை நியமிக்காவிட்டால் UNP தோல்வியை தழுவுவது உறுதி )
ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமல் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் எதிர்வரும் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை தழுவுவது உறுதி என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஆகையினால். சஜித் பிரேதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியே தீருவோமெனவும் அவர் கூறியுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்புச் சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்காவிட்டால் கட்சி பெரும் தோல்வியை தழுவுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தெரிந்து கொண்டும் அவரை தேர்தலில் நிறுத்தா விட்டால் நாம் அரசியல் செய்வதில் அர்த்தமில்லை.
ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் களமிறங்குவார் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடாளுமன்றம், சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் மத்திய செயற்குழு என்பவற்றில் அமைச்சர் சஜித்துக்கு பெரும்பான்மை ஆதரவு உண்டு.
அவர் தேர்தலில் போட்டியிட்டால் இலகுவாக வெற்றிபெற முடியும் என அனைவருக்கும் தெரியும். அமைச்சர் சஜித் ஜனாதிபதியாவதை தடுக்கும் வகையில் பலர் சதி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்” என்றும் அவர் கூறினார்.