(மொட்டுக்காக சம்மாந்துறையில் களம் இறங்கும் குதிரை !!)
தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கும் காலகட்டத்தில் சகல கட்சிகளும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டு தன்னுடைய பிரச்சாரங்களை மிகத் தீவிரமாக செய்து வருகின்றார்கள் அதன் ஒரு அங்கமாக தேசிய காங்கிரஸின் சார்பில் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து எவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளை கொண்டு செல்லல் என்பது சம்பந்தமாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்று சம்மாந்துறை காரியாலயத்தில் இடம்பெற்றது.
தேசிய காங்கிரஸின் மேலதிக தேசிய அமைப்பாளர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி எம் ஆசிக், சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் எஸ் எல் ரியாஸ், கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர் எம். டி. அப்துல் கரீம், தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஆக்கிப் அன்சார். அடங்கலாக இளைஞர் அமைப்பாளர்கள் , கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இளைஞர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து கணிசமான வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேசிய காங்கிரஸின் தேசிய தலைமை எவ்வாறான முடிவுகளை எடுத்து எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுகின்றதோ அவ்வழியில் சென்று எம் மக்களை விழிப்பூட்டி இந்த நாட்டின் பாதுகாப்பையும் இந்த நாட்டின் அபிவிருத்தியையும் இலக்காக கொண்டு மீண்டும் மஹிந்த யுகத்தை உருவாக்க நாம் எல்லோரும் முழுமனதோடு பாடுபட்டு உழைக்க வேண்டும் என அங்கு முடிவு செய்யப்பட்டது.