• Fri. Oct 24th, 2025

எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கிறது என்பதை ஹக்கீம் தீர்மானித்து விட்டார்

Byadmin

Nov 11, 2019

எதிர்காலம் மஹிந்த ராஜபக்ஸவின் கையில்தான் இருக்கின்றது என்பதை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்க்கீம் தீர்மானித்து விட்டார், ஆகவேதான் முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்பது மஹிந்த ராஜபக்ஸ என்பவரை எதிர்ப்பது ஆகாது என்று அம்பாறையில் அவர் பேசினார் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் பேசினார்.

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டுடன் தோடம் பழம் சுயேச்சை குழுவோடு இணைந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை மாலை மொட்டு கட்சியின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவாக நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இவர் மேலும் குறிப்பிடும் போது,

2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி பிரசார கூட்டம் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. கல்முனையை சேர்ந்த ஒருவர்தான் கல்முனை மாநகர மேயராக வருவாரா? சாய்ந்தமருதை சேர்ந்த ஒருவர் வருவாரா? என்கிற பெரிய கேள்வி சாய்ந்தமருது மக்கள் மத்தியில் காணப்பட்டது. நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்கிற வகையில் பேசியபோது சாய்ந்தமருதை சேர்ந்தவர் அதிக விருப்பு வாக்குகளை பெறுகின்ற பட்சத்தில் சாய்ந்தமருதுக்கு மேயர் பதவியின் முதல் அரைவாசி காலமும் வழங்கப்படும் என்கிற பகிரங்க உத்தரவாதத்தை வழங்கினேன்.

அவ்விதம் சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை மு. காவுக்கு உள்ளேயும், வெளியேயும் வாதாடினேன். அந்த எண்ணத்தை ஏனையவர்களின் மனதிலும் விதைத்தேன். எனது உறுதிமொழி, ஆருடம் ஆகியவற்றுக்கு அமைவாக சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி கிடைத்தது.

சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வேண்டும் என்கிற கோரிக்கை விஷ்வரூபம் எடுத்ததற்கு பின்னாலும் கல்முனை மாநகர சபை விவகாரம்தான் இருக்கின்றது. எவ்வாறு சாய்ந்தமருதுக்கு மேயர் பதவியை பெற்று கொடுத்தோமோ அதே போல சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையையும் நாம் நிச்சயம் பெற்று கொடுப்போம். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்து இருக்கின்றது. கோதாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வாகை சூடுவார் என்பது திண்ணம்.

மற்றவர்களை போல் அல்லாது நாம் வெற்றி வேட்பாளரை ஆதரிக்கின்ற காரணத்தால் நிச்சயமாக சாய்ந்தமருதுக்கான நகர சபையை பெற்று தருவோம். மொட்டு கட்சியின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவை ஆதரிப்பதற்கு சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் எடுத்த தீர்மானம் என்பது வெறுமனே உள்ளூராட்சி சபை கோரிக்கையை நிறைவேற்றி பெறுவதற்கானதாக மாத்திரம் இல்லை. மாறாக முஸ்லிம்கள் முன்னெடுத்து செல்ல வேண்டிய சரியான புதிய அரசியல் பாதைக்கான தொடக்க புள்ளி ஆகும். தூர நோக்குடைய, தீர்க்கதரிசனமான, சாணக்கியமான, முன்னுதாரணமான தீர்மானம் ஆகும்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் கோதாபய ராஜபக்ஸவை ஆதரிக்கின்ற தீர்மானத்தை எடுத்த பின்பு மு. கா தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறையில் பேசியபோது முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிப்பது என்பது மஹிந்த என்பவரை எதிர்ப்பதாக ஆகி விடாது என்றிருக்கின்றார். எதிர்காலம் மஹிந்தவின் கையில்தான் இருக்கின்றது என்பதை அவர் தீர்மானித்து விட்டார். சொந்த தொகுதியும், சொந்த ஊருமான கலகெதரவில் முஸ்லிம்கள் ஒரு தொகையினருக்கு கூட்டம் போட்டு பேசியபோது கொதாபய ராஜபக்ஸவுக்கு எதிராக அதிகம் பேசவோ ஆட்டம் போடவோ கூடாது, அடக்கி வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றார்.

அவர் சரியாக கணித்து , கணக்கு போட்டு விட்டார் என்பது அதில் இருந்து விளங்குகின்றது. மேலும் வடக்குக்கு சென்று பேசியபோது கோதாபய ராஜபக்ஸ தெரிவானாலும் ஜனாதிபதி பதவியில் நீடிக்க மாட்டார் என்று சொல்லி இருக்கின்றார். ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஸவும், பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் விளங்குவார்கள். ஆனால் அது பிந்தியே முஸ்லிம்களின் மிக பெரிய கட்சியின் 20 வருட கால தலைவருக்கு விளங்கி இருக்கின்றது.

ஆனால் இத்தீர்மானத்தை முன்னதாக எடுத்த முன்னோடி என்கிற பெருமை சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கே உரியது.

பெரும்பான்மை சிங்களவர்களும் சரி, தமிழர்களும் சரி முஸ்லிம் சமூகத்துக்கு எந்த வகையிலும் எதிரானவர்கள் அல்லர். இஸ்லாமிய மார்க்கமோ, குரானோ, ஹதீஸோ அவர்களின் பிரச்சினை அல்ல. அவர்கள் கேடு கெட்ட காவாலித்தனமான முஸ்லிம் அரசியல் தலைமைகளையே பிரச்சினையாக பார்க்கின்றனர். ஜாயா, அஷ்ரப் போன்ற முஸ்லிம் தலைவர்களை சிங்கள மக்கள் பெரிதும் நேசித்தார்கள். இன்றைய முஸ்லிம் தலைவர்களை அரசாங்கத்தினதும், மக்களினதும் பணத்தை சூறையாடுபவர்களாகவே பார்கின்றனர்.

அன்றைய தலைவர்களுக்கு அரசாங்க தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். அந்த காலம் மலையேறி விட்டது. ஆனால் இன்று ரவூப் ஹக்கீம் எழுந்து நின்று மரியாதை செலுத்துவதோடு கை கட்டி கொண்டு நிற்கின்றார். சஜித் பிரேமதாஸவும் சரி, கோதாபய ராஜபக்ஸவும் சரி இரு பிரதான விடயங்களையே நாட்டு மக்கள் முன்னிலைக்கு வைத்திருக்கின்றார்கள். ஒன்று நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பது. மற்றது நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்பது. சிங்கள பெரும்பான்மை மக்களில் அதிகமானவர்களினதும், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களில் குறைவானவர்களினதும் வாக்குகளை பெறுகின்ற ஒருவர் மாத்திரமே இந்நாட்டு ஜனாதிபதியாக நிச்சயம் வர முடியும். மாறாக தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அதிக படியான வாக்குகளையும், சிங்கள பெரும்பான்மை மக்களுக்குள் இருந்து குறைவானவர்களின் வாக்குகளையும் பெறுகின்ற ஒருவர் நிச்சயமாக ஜனாதிபதியாக வரவே முடியாது. எனவே சிங்கள மக்களின் விருப்பமும், தெரிவுமே முஸ்லிம் மக்களின் விருப்பமாகவும் தெரிவாகவும் இருக்க வேண்டும்.

1956 ஆம் ஆண்டு சிங்கள மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து இந்நாட்டில் தமிழர்கள் மேற்கொண்ட 30 வருட யுத்தம் காரணமாக நாடு அபிவிருத்தி அடையாமல் அழிந்து விட்டது என்கிற எண்ணம் சிங்கள மக்களுக்கு இருக்கின்றது. யுத்தம் முடிந்த நிலையில் நாடு அபிவிருத்தி அடையும் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால் சஹ்ரான் என்பவன் வந்து எல்லா இன மக்களின் தலை மீதும் குண்டு வைத்து விட்டான். தமிழர்கள் காரணமாக ஏற்பட்ட 30 வருட கால அழிவை சஹ்ரான் ஒரு நாளில் நிகழ்த்தி விட்டான் என்றே சிங்கள மக்கள் சிந்திக்கின்றார்கள். முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றார்கள்.

இந்நிலை மாற வேண்டுமானால் சிங்கள மக்களின் கனவே முஸ்லிம் மக்களின் கனவாகவும் இருக்க வேண்டும். ஆகவே அதற்கான நமது தெரிவு எது? என்பதை நாம் சரியாக தீர்மானிக்க வேண்டும். முட்டாள்தனமான முஸ்லிம்கள் தலைமைகளால் அதற்கான சரியான தீர்மானத்தை எடுக்க முடியவில்லை. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலும், சாய்ந்தமருது மக்களும் எடுத்த தீர்மானம் முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தானது என்று ரவூப் ஹக்கீம் பிதற்றுகின்றார்.

அவ்வாறு விமர்சிப்பதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. ஏனென்றால் அவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக முதன்முதல் அரியணையில் ஏற்றியது சாய்ந்தமருது மண்ணே ஆகும். புதிய தொடக்கம் ஒன்று மீண்டும் இம்மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் கோதாபய ராஜபக்ஸவின் மொட்டு சின்னத்துக்கு ஒருமித்து நின்று அமோக வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *