• Sun. Oct 12th, 2025

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ்

Byadmin

May 28, 2021

அச்சமின்றி கடல் உணவுகளை உட்கொள்ள முடியும்

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும், கப்பல் விபத்திற்குள்ளான கொழும்பு, கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

இதனால் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகங்களும், அச்சமும் ஏற்பட்டுள்ளன. இவற்றை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

” கப்பல் தீ விபத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படடுள்ளது. கடலில் கலந்திருக்கக் கூடிய பாதார்த்தங்கள் தொடர்பாகவும், அவற்றினால் உருவாக்கக்கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் கண்டறிவதற்கான ஆய்வுகளில் நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

குறித்த ஆராய்ச்சி அறிக்கை கிடைக்கும் வரையில், சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிச் செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்ப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் நாடளாவிய ரீதியில் கடலுணவுசார் போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பேலியகொட உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சந்தைகளில் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற சந்தேகத்திற்கிடமான கடல் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்படட கடலுணவுகளே விற்பனை செய்யப்படுகின்றன என்ற அடிப்படையில், அவற்றை உட்கொள்வது தொடர்பாக மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பிரதேசத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலின் கட்டமைப்பிற்கும் இந்த விபத்தினால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என கடல்சார் பாதுகாப்பு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *