• Sat. Oct 11th, 2025

இஸ்லாத்தில் மதுபானத்திற்கு தடை – பீர் போத்தலை அகற்றிய பால் போக்பா – மற்றுமொரு வீரரும் கோகோ கோலாவை அகற்றினார்

Byadmin

Jun 18, 2021

2020 யூரோ  கிண்ண ஊடகவியலாளர் சந்திப்பில் கோகோ கோலா போத்தல்களை அகற்றிய சமீபத்திய வீரராக இத்தாலியின் மானுவல் லோகடெல்லி திகழ்கிறார்.

போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிரெஞ்சு வீரரான பால் போக்பாவின் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் மானுவல் லோகடெல்லியின் இந்த செயல் வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகல் ஆட்டத்திற்கு முன்னர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஊடகவியலாளர் சந்திப்பின் முன்னர், தனக்கு முன்னாலிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த இரு கோகோ கோலா  போத்தல்களை அகற்றியதுடன், அருகில் இருந்த தண்ணீர் போத்தலை மேலே உயர்த்திக் காட்டினார்.

‘அகுவா’ என தண்ணீருக்கான போர்த்துகீசிய வார்த்தையையும் அவர் கூறி கோலா மீதான தன்னுடைய வெறுப்பைக் காட்டி எல்லோரும் கோலாவுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டுமென சமிக்ஞை செய்தார் ரொனால்டோ

உலகில் மிகவும் பிரபல்யமான கால்பந்து வீரரும், சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டவருமான ரொனால்டோவின் இந்த செயல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மாத்திரமன்றி ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடருக்கான பிரதான அணுசரனையாளர்களுள் ஒருவரான கோகோ கோலாவின் பங்கு விலையும் 4 பில்லியன் அமெரிக்க டொலர் சரிவை கண்டது.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு ஜேர்மனிக்கு எதிரான பிரான்சின் தொடக்க ஆட்ட வெற்றியைத் தொடர்ந்து ஊடகக் சந்திப்பினை மேற்கொண்ட பிரெஞ்சு வீரரான பால் போக்பா,  தனக்கு முன்னால் மேசையிலிருந்த ஹெய்னெக்கென் பீர் போத்தலை அகற்றினார்.

பால் போக்பா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்.  முஸ்லிம்களைப் பொறுத்தவரை, ஆல்கஹால் ‘ஹராம்’ அல்லது தடைசெய்யப்பட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

இப்போது 2020 யூரோ அணுசாரணையாளர்களுக்கு வெறுப்புணர்ச்சியை வெளிபடுத்தும் மூன்றாவது வீரராக மானுவல் லோகடெல்லி மாறியுள்ளார்.

ஊடக சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக மேசையிலிருந்த கோகோ கோலா போத்தல்களை அகற்றிய அவர், தான் கொண்டு வந்த தண்ணீர் போத்தலை மேசையின் மீது வைத்து, அதற்கு முன்னுரிமை கொடுத்தார். (வீரகேசரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *