வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 105 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
4-வது போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நாளை (6-ந் தேதி) நடக்கிறது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஒரு வேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டாலும் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும்.
கடந்தபோட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 190 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது ஏமாற்றமே.
இதனால் நாளைய ஆட்டம் வீரர்கள் அனைவரும் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
4-வது போட்டிக்கான இந்திய அணியில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இதற்கு சரியான பலன் இல்லை. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதே போல் வேகபந்து வீரர் முகமது ஷமியும் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
எனவே நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம். யுவராஜ்சிங், புவனேஷ்வர் குமார் மீண்டும் களம் திரும்பலாம்.
4-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் ஆடியது. அதே உத்வேகத்தில் நாளைய போட்டியிலும் வென்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் ஆர்வத்துடன் இருக்கிறது.
தோற்றால் தொடரை இழந்துவிடும் என்பதால் அந்த அணி வீரர்கள் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஆடுவார்கள். இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டென் 3, தூர்தர்சன், சோனி சிக்ஸ் டெலிவிஷன்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா:- வீராட் கோலி (கேப்டன்), தவான், ரகானே, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, யுவராஜ்சிங், ரிசப்பன்ட், புவனேஸ்வர் குமார்.
வெஸ்ட்இண்டீஸ்:- ஹோல்டர் (கேப்டன்), இஷன் லீவிஸ்,கெய்ல் ஹோப், ஷசி ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜேசன் முகமது, சுனில் அம்ரீஸ், தேவேந்திர பிஷி, கும்மினஸ்,, அல்ஜாரி ஜோசப், அஸ்லே நர்ஸ், ரோவமேன் போர்வல், வில்லியம்ஸ்.