• Sat. Oct 11th, 2025

சரும அழகுக்கு 7 நாள் வழிகாட்டி

Byadmin

Jan 29, 2022

சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது சிலருக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக தோன்றலாம். பருவ நிலையில் மாற்றம் ஏற்படும்போது முகப்பரு, கருவளையம், சரும சுருக்கம், சருமத்தில் மெல்லிய கோடுகள், நிறமி பாதிப்பு, சரும பொலிவின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். சரும பராமரிப்பு அட்டவணை ஒன்றை தயார் செய்து அதனை வாரத்தின் 7 நாட்களிலும் முறையாக பின்பற்றி வருவது பலன் கொடுக்கும். அது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதில் முக்கிய பங்கும் வகிக்கும். அதற்கான வழிமுறைகளை காண்போம்.

முதல் நாளை சருமத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் டோனிங் செய்வதன் மூலம் தொடங்குங்கள். இதற்காக மென்மையான கிளீன்சரை உபயோகியுங்கள். இயற்கையான சுத்தப்படுத்தியை நீங்களே தேர்வு செய்தும் கொள்ளலாம். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் அசுத்தங்கள் அனைத்தையும் அகற்ற உதவும். அதே நேரத்தில் சுத்தப்படுத்தும் செய்முறையின்போது சருமத்தை மென்மையாக அணுக வேண்டும். இத்தகைய சுத்தப்படுத்துதல் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கும்.

நாள் 2 – உணவுமுறை:

சருமத்தை மேம்படுத்துவதில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள் சாப்பிடுவது சருமத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். சருமம் நீரேற்றமாக இருப்பதற்கு உணவில் திரவங்களைச் சேர்ப்பதும் முக்கியம். தண்ணீர், பழச்சாறு, காபி, தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ளலாம். இதனை 2-வது நாளில் மட்டும்தான் கடைப் பிடிக்க வேண்டும் என்பதில்லை. ஆரோக்கியமான, சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்தை வாரம் முழு வதும் பின்பற்ற வேண்டும்.

நாள் 3 – உரித்தல்:

சருமத்தில் படிந்திருக்கும் அசுத்தங்கள் மற்றும் இறந்த சருமத்தை அகற்றுவதற்கு ‘எக்ஸ்போலியேஷன்’ எனப்படும் உரித்தல் முக்கியமானது. சருமத்தின் தன்மையை பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எக்ஸ்போலியேஷன் செய்ய வேண்டியிருக்கும். இது சருமத்தின் பொலிவுக்கு இடையூறாக இருக்கும் அசுத்தங்கள், உதிர்ந்த, இறந்த செல்களை வெளியேற்ற உதவும். அடைபட்டிருக்கும் சரும துளைகளை குறைத்து, பளபளப்பான, ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்திற்கு வித்திடும்.

எக்ஸ்போலியேஷன் செய்வதற்கான மாஸ்கை வீட்டிலேயே உருவாக்கலாம். மலிவு விலையில் கடையிலும் வாங்கிக்கொள்ளலாம். இரண்டு மூன்று முறை எக்ஸ்போலியேஷன் செய்வது நல்லது. இருப்பினும் சருமத்தின் தன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

நாள் 4 – கண்:

சரும பராமரிப்பில் கண்களின் ஆரோக்கியத்தை பேணுவதும் அவசியமானது. கண்களில் வீக்கம், கண்களுக்கு அடியில் கருமைநிற வட்டங்கள், மெல்லிய கோடுகள் தென்பட்டால் அதனை சரி செய்வது அவசியமானது. இதற்கான கிரீம்கள் இருக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம். 4-வது நாளில் கிரீம்களை தவறாமல் பயன்படுத்தி வரலாம். அதேவேளையில் நன்றாக தூங்கி எழுந்தாலே இத்தகைய பிரச்சினைகள் எழாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள தோல் மென்மையானது. அதனால் அதனை நன்றாக பராமரிக்க வேண்டும். சூரிய கதிர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் சமயத்தில் வெளியே செல்லும்போது சன்கிளாஸ் அணிய மறக்கக்கூடாது.

நாள் 5 – பேஸ் மாஸ்க்:

சரும பராமரிப்பு வழக்கத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு ‘பேஸ் மாஸ்க்’ பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை ‘பேஸ் பேக்’காக தயார் செய்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். உங்கள் தோல் வகைக்கு ஏற்ற எளிதில் உறிஞ்சும் பொருட்களை பயன்படுத்தலாம். இத்தகைய பேஸ் மாஸ்க்குகள் வீக்கத்தைக் குறைக்கவும், முகப்பருவை போக்கவும் உதவும். சருமத்தை பிரகாசமாகவும் மென்மையாகவும் மாற்றும்.

நாள் 6 – அழகு சாதன பொருட்கள்:

ஒப்பனை தூரிகைகள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை நன்கு சுத்தம் செய்வதும் தோல் பராமரிப்புக்கு அவசியமானது. ஏனெனில் தூரிகைகள், ஸ்பாஞ்சுகளில் அழுக்குகள், இறந்த சரும செல்கள், கிருமிகள் படர்ந்திருக்கும். இத்தகைய மேக்கப் பொருட்களை சுத்தம் செய்வது சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும். பயன்படுத்தும் மேக்கப் பொருட்களின் ஆயுட்காலம் நீளும்.

என்னென்ன பொருட்களை பயன்படுத்தி மேக்கப் செய்கிறோமோ அவைகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது சிறந்தது. அத்துடன் ஸ்பாஞ்ச் போன்ற பொருட்களை 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுமாறு சரும பராமரிப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் ஸ்பாஞ்சுகளில் அழுக்கு இருந்தால் அதில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

நாள் 7 – ஓய்வு நாள்:

வாரத்தில் ஒரு நாள் சருமத்திற்கு முழுமையாக ஓய்வு கொடுத்து விட வேண்டும். மேக்கப் உள்ளிட்ட எந்தவொரு சரும பராமரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. தினசரி மேக்கப் போடுபவராக இருந்தால் சற்று சிரமமாக இருக்கும்.

சரும பராமரிப்பு வழக்கத்தை முற்றிலுமாக மாற்றி மேக்கப் இல்லாமல் ஒரு நாள் வாழ்வது ஆரம்பத்தில் வித்தியாசமாக தோன்றலாம். ஒரு நாள் முழுவதும் மேக்கப் இல்லாமல் இருப்பது கடினமானது என்று தோன்றினால் படிப்படியாக பின்பற்ற தொடங்கலாம். ஈரப்பதம் மிகுந்த மாய்ஸ்சுரைசர், லிப் பாப் போன்றவற்றை வேண்டுமானால் உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *