• Sat. Oct 11th, 2025

ரமழானுக்குப் பின் நாம்…?

Byadmin

Jul 5, 2017

அடடே… அதற்குள் நோன்பு முடிந்து விட்டதே…’ என்று வருத்தப்படுவோர் ஒரு புறம். ‘அப்பாடா…. ஒருவழியாய் நோன்பு முடிந்து விட்டது…’ என்று மனதுக்குள் மகிழ்ச்சிப்படுவோர் மறுபுறம். இவற்றில் நீங்கள் எந்தப்புறம் என்பதை உங்கள் செயல்களே தீர்மானிக்கும்.

புனித ரமலான் மாதம் வந்தது நாமும் மசூதிக்கு ஐவேளையும் விடாது தொழுது வந்தோம். நோன்புப்பெருநாள் பண்டிகைத் தொழுகை முடிந்தது, நாமும் ஐவேளைத் தொழுகைகளை முடித்துக் கொண்டோம் என்று ரமலான் முடிந்தவுடன் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது என்பது நமக்கு நல்லதா?

அவசியத் தேவை ஏற்படும் போது மட்டும் அல்லாஹ்வை நாம் தொடர்பு கொள்வதும், தேவை முடிந்தவுடன் அவனது தொடர்பை துண்டித்துக்கொள்வதும் நமது மனசாட்சிப்படி நாம் செய்வது சரிதானா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் (17:84) எச்சரிக்கிறான்: ‘(நபியே!) நீர் கூறுவீராக: ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல்படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார்? என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்’.

நாம் நமது மனோஇச்சைப்படி நடக்கக்கூடாது என்பதைத்தான் இவ்வசனம் தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டு கிறது. இதை இன்னொரு இறைமறை வசனம் (45:23) மிகத் தெளிவாகவே சொல்லிக்காட்டுகிறது இப்படி:

‘(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழி கேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரை யிட்டு; இன்னும்,அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

நம்மை எப்போதும் கண்காணித்து. நமக்குத் தேவையான வற்றை தந்தருள்பவன் அல்லாஹ் ஒருவனே. அவனை விட்டுவிட்டு மனம்போன போக்கில் செல்வது ‘நமது மனதை ஆண்டவனாக எடுத்துக்கொண்டோம்’ என்பதற்கு சாட்சி.

மனம் நமக்கு கட்டுப்பட வேண்டுமே தவிர, நாம் மனதுக்கு கட்டுப்படுவது என்பது, நாம் நமது வீட்டு வேலைக்காரனுக்கு கட்டுப்படுவது போன்றதுதான். இதை யாருமே விரும்புவதில்லை. அதிகாரம் செய்து வாழ்வதையே எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால், மனதிற்கு மட்டும் எப்படி அடிமைப்பட்டு வாழ விரும்புகின்றனர்? இது முற்றிலும் விந்தையாகத்தான் இருக்கிறது என்று இமாம் கஸாலி (ரஹ்) அவர்கள் கேட்பது நியாயம் தானே.

நோன்பு, முன் வாழ்ந்த சமூகத்தினர்களுக்கு கடமையாக்கப்பட்டது போன்று தான் நமக்கும் கடமையாக்கப்பட்டது. காரணம், இதன் மூலம் பயபக்தியுடையவர்களாக நாம் மாறலாம் என்பது தான். நமது ஐம்புலன்கள் பசித்திருக்கும் போது தான் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நோன்பு அதை நமக்கு மிகச்சரியாகவே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், நோன்பு முடிந்தவுடன் மீண்டும் நம் மனதை நாமே வழிகெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ரமலானில் நம்மை அறியாமலேயே கடைப்பிடித்த நல்ல அமல்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் அவையெல்லாம் இன்று நம்மை விட்டும் எங்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டன?. பொதுவாக பயிற்சி என்பது ஓரிரு மாதங்கள் தான். பிறகு நாம் தான் இதர மாதங்களில் அப்பயிற்சியை விடாது கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

இறைவசனம் ஒன்று கூறுகிறது:

‘இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி (யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்’. (திருக்குர் ஆன் : 53:39-40)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எவர் தன்னை சரிசெய்து கொண்டு, மரணத்துக்குப் பின்னாலுள்ள ஒரு வாழ்க்கைக்கு பயன்படும்படியான அமலை யார் செய்கிறாரோ அவரே மகாபுத்திசாலி’. (நூல் : மிஷ்காத்)

இன்றைக்கு பணம், பட்டம், பதவி, வீடு, சொத்து, கார், பங்களா என்று ஏதாவது ஒன்று இருந்தால், அவர் தான் அறிவாளி என்று இவ்வுலகம் போற்றுகிறது.

ஆனால், நபிகளார் ‘மறுமைக்காக அமல் செய்பவரே நல் அறிவாளி’ என்கிறார்கள். நம்மைநாமே அறிவாளி என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என்றால் இதர பதினோரு மாதங்களிலும் ரமலானைப் போலவே நாம் நல்ல அமல்கள் செய்ய முன்வர வேண்டும்.

ஆனால் அதற்கு நாம் முன்வருவதில்லை. அனைத்துச் சோதனைகளும் அந்த ஒற்றை 27-ம் இரவிலேயே முடிந்து போய் விட்டது இனி நமக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் இல்லை என்று எண்ணி விடுகிறோம். அன்று முதல் ஒவ்வொரு நாளையும் பெருநாளாய் கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.

மெய்யான பெருநாளும், நன்மையைத் தரும் நாளும் நாம் தொழும் அன்றாட அதிகாலை பஜ்ர் தொழுகையில் இருந்து தான் தொடங்குகிறது என்பதை புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.

வாருங்கள்… இறை வணக்கத்தை தொடருவோம், குறைகளை அகற்றுவோம்.

-மௌலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *