• Mon. Oct 13th, 2025

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் – ஜம்இய்யத்துல் உலமாவின் வாழ்த்துச் செய்தி

Byadmin

Feb 4, 2022

நம் தேசத்தின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாம் இப்போது நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை உட்பட முழு உலகிற்கும் கடந்த இரு வருடங்களாக பெரும் சவாலாக காணப்படும் கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி இன்னும் முடிவுரா நிலையில் நாம் இச்சுதந்திர தினத்தை அடைந்துள்ளோம். 

இந்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன, மத பேதங்களுக்கு அப்பால் நம் மூதாதையர் உழைத்தனர். பேதங்களின்றி ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதும் அதன் அடிப்படையில் ஐக்கியமாக வாழ்வதும் இந்நாட்டை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக வளம் பெற்ற நாடாக கட்டியெழுப்புவதுமே அவர்களது ஒரே குறிக்கோளாக இருந்தது. ஆதலால் ஒவ்வொரு சமூகமும் தத்தமக்குரிய உரிமைகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டனர். 

74 வருடங்களுக்கு முன் அரசியல் ரீதியாக நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும் காலாகாலமாக நடந்த இனக் கலவரங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாகவும் அரசியல் ரீதியான பிளவுகளினாலும் இன்னுமே நாம் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ஒரு நெருக்கடியான சூழலியே இருக்கின்றோம். இதிலிருந்து மீட்சிபெற ஆண்மீக, பொருளாதார, சமூக மற்றும் பண்பாடு ரீதியாக நம்மை வளப்படுத்தி நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரகள் மற்றும் எல்லா பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழவும் நாட்டில் நல்லபிவிருத்தி ஏற்படவும்; சகல வளங்களும் பெற்ற சுதந்திர தேசமாக இலங்கை மிளிரவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றது. 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *