(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் நடைபெறும் போது அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சு.க. தலைமையகத்தில் புதன்கிழமை (2) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். மாவட்டங்கள் தோறும் சென்று மாவட்ட மாநாடுகளை நடத்த தீர்மானித்துள்ளோம்.
அதே போன்று எமது நிபுணர்கள் குழுவும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பர்.
தற்போது தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. எனினும் தேர்தல் நடைபெறும் போது அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் விவசாயிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகக் காணப்படுகிறது. வறுமை, நோய் தொற்று நிலைமை என பல பிரச்சினைகளால் மக்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்றார்.