சட்டவிரோத பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் ஊடாக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் அதிகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த பிரிவின் ஊடாக 78 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சட்ட விரோத சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதோடு, சட்ட விரோத பணபறிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பொலிஸில் பல புதிய பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சட்டவிரோத பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரிவு முக்கியத்துவமுடையதாகும். இந்த பிரிவு கடந்த ஆண்டு ஜூலை மாதமளவில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த பிரிவு குற்ற விசாரணைப்பிரிவில் ஒரு பகுதியாகக் காணப்பட்டது.
எனினும் பின்னர் அதற்கு புதிய அனுபவமுடைய அதிகாரிகளை நியமித்து புதிய பிரிவாக அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஏதேனுமொரு சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சந்தேகநபர்கள் அவற்றின் ஊடாக சொத்து மற்றும் பணத்தை சேகரித்திருப்பார்களாயின் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சட்ட விரோத பண பறிமாற்றத்தினை தடுப்பதே இந்த பிரிவின் பிரதான கடமையாகும்.
இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு 6 மாதங்களே நிறைவடைந்துள்ள போதிலும் , சட்ட விரோதமான முறையில் பணத்தை சேமித்த சுமார் 1200 சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று 325 போதைப்பொருள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பிரிவின் ஊடாக 78 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சட்ட விரோத சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சட்ட விரோத பணபறிமாற்ற சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் போதைப் பொருள் ஒழிப்பு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதன் பின்னர் , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை மற்றும் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் , குறித்த சந்தேகநபர்கள் சட்ட விரோதமாக சேமித்த சொத்துக்கள் தொடர்பிலும் இந்த பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
இதுதவிர வேறு முறைமையின் கீழ் சட்ட விரோதமாக சொத்துக்கள் சேகரிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பிலும் இந்த பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக போதைப்பொருள், மதுபானம், ஆயுத வியாபாரங்கள் மற்றும் மனித கடத்தல்கள் உள்ளிட்ட 18 சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும்.
மேற்கூறப்பட்ட 78 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களில் வீடுகள், காணிகள், வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் என்பன உள்ளடங்குகின்றன. இவை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தொடர்ந்தும் செயற்படுவர். முன்னெடுக்கப்பட்டு வரும் ஆயிரத்திற்கும் அதிக விசாரணைகள் தொடர்பில் இதுவரையில் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு , அவர்களது சொத்துக்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.