நாட்டில் தற்போது எந்தவொரு அரசாங்கம் இருந்தாலும் எரிபொருள் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தி இருக்கவே முடியாது. ஆனால், நாட்டுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் எரிபொருள் விலை அதிகரிப்பை தடுத்திருக்கவே முடியாது.
கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்தமையினால், அந்நிய செலாவணியும் வீழ்ச்சியடைந்தது. அத்தோடு, எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் முறையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால், நீண்ட கால கடன் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டி வந்தது.
நாங்கள் ஆட்சி அமைக்கும்போது, அந்த கடன்களை மீளச் செலுத்த வேண்டி வந்தது. அதன் பின்னர் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் நீண்ட கால கடனுக்கு எரிபொருள் வழங்குவதை குறித்த நாடுகள் நிறுத்தின. துறைமுகத்துக்கு கப்பல் வந்த பின்னரே பணம் செலுத்தப்படும். இதனாலேயே கடந்த காலங்களில் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தன.
இந்த நிலையில், நாட்டுக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ளது. நேற்று முன்தினம் (13) 34 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் தரையிறக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சார சபைக்கு தேவையான எரிபொருளும் மக்களுக்கு தேவையான எரிபொருளும் தற்போதுவரை விநியோகிக்கப் பட்டுள்ளது.
ஆனால், நாங்கள் எரிபொருள் விலையை அதிகரிக்கும்போது, இந்திய ஒயில் நிறுவனமான (ஐ.ஓ.சி.) டீசலின் விலையை எங்களைவிட சற்று அதிகரித்திருந்தது. அதனை குறைக்குமாறு அவர்களை அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். எனினும், இரண்டு, மூன்று நாட்களில் டீசல் விற்பனை செய்யும் எங்களுடைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது ஒரு மணித்தியாலத்தில் விற்பனை செய்யும் நிலைமை காணப்படுகின்றது. அது எமக்கு பெரிய பாதிப்பில்லை. எனினும், நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் களஞ்சியசாலைகளுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது காணப்படுகின்ற அவசர தேவையுடன் ஒப்பிடும்போது எங்களுடைய விநியோக பவுஸர் கொள்ளளவில் குறைபாடு இருக்கின்றது.
அத்தோடு, பவுஸர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் தாங்களும் போக்குவரத்தில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது விநியோகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, அரசாங்கம் நட்டத்தை தாங்கிக்கொண்டு டீசலை விற்பனை செய்கின்றது. விற்பனை லொறி, பஸ்கள் மற்றும் கொள்கலன்களுக்கு டீசலே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பஸ்கள் போன்றவற்றுக்கு மானியம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அடுத்த வாரத்தில் அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றார்.