• Sun. Oct 12th, 2025

“முஸ்லிம் மக்களை தலை குனிய செய்து விட்டார்கள் முஸ்லிம் உறுப்பினர்கள்!”

Byadmin

Apr 20, 2022

இன்று இந்த அரசாங்கத்துக்கு எதிராக பாமர மக்கள் படித்த மக்கள் என்று அனைவரும் அரசாங்கமும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோஷமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசாங்கம் விட்ட தவறுகளை அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களே சுட்டிக் காட்டக் கூடிய ஒரு நிலை காணப்படுகிறது.இந்த நிலையில் அமைச்சுப் பதவிகளை பெற்று முஸ்லிம் மக்களை தலை குனிய செய்து விட்டார்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இந்த அரசாங்கமும் அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும் செய்த அடாவடித்தனங்கள் அட்டூழியங்களுக்கு கடவுள் கொடுக்கும் சாபமாக இந்த பிரச்சனை எழுந்திருக்கிறது.

அதனை இன்று பெரும்பான்மை இன மக்களே மேடை போட்டு சொல்கிறார்கள்.

ஆனால் குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்திருப்பது என்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. வெட்கம், ரோசம், மானம் இருந்தால் இந்த அமைச்சுப் பதவிகளை அவர்கள் எடுத்திருக்க மாட்டார்கள்.

பள்ளிவாசலுக்குள் நோன்பிருந்த பொது பன்றி இறைச்சியினை வீசி எறிந்தார்கள். அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு வைத்து தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் ஆட்சி பீடம் ஏறுவதற்கு சதி செய்தார்கள்.

இதனால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்னும் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் என்று யார் யாரெல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டு கேள்வி கேட்டார்கள் அவர்களை அடையாளம் கண்டு இந்த அரசாங்கம் அடக்கி ஒடுக்கி வைத்தது.

எமது வன்னி மாவட்டத்தை பொறுத்த மட்டில் மீன் பிடி விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது.

அதற்கு எரிபொருள் விலையேற்றம் பசளை தொடர்பாக இந்த அரசாங்கம் கொண்டு வந்த கொள்கைகளினால் மக்கள் அன்றாடம் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பல காரணங்களுடன் முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கம் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டங்கள் செய்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்து இருக்கின்றார்கள்.

அவர்கள் இந்த அரசாங்கத்தின் ஆட்சியை பாதுகாக்கவும் அவர்களுடைய சொகுசு வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அமைச்சுப் பதவிகளை பெற்றிருக்கிறார்கள்.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களைப் பொறுத்தமட்டில் இவரை அரசியலுக்கு கொண்டு வந்து அரசியலில் அறிமுகப்படுத்தினேன்.

பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றத்தில் எனக்கும் சதி செய்து அவர் பாராளுமன்றத்திற்கு சென்றார்.

இவ்வாறான ஒருவரை யா நான் பாராளுமன்றம் செல்வதற்கு உதவி செய்தேன் என்று நானே வெட்கி தலை குனிகிறேன்.

அதே போல் இந்த நாட்டில் வாக்களித்த மக்களுக்கு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தங்களுடைய சொகுசு வாழ்வையும் தங்களுடைய தொழிலையும் தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருக்கின்றார்கள்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருட்கள் இல்லை, அத்தியாவசிய பொருட்களுக்கு விலை ஏற்றம் என ஏங்கி எங்களுக்கு ஒரு புதியதொரு அரசாங்கம் வராதா? என்று மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வன்னி மாவட்டத்தில் அமைச்சுப் பதவியை எடுத்திருக்கும் மஸ்தான் பெரும்பான்மையாக வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் .

இதனால் முஸ்லிம் மக்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *