• Sun. Oct 12th, 2025

ரமலான் கற்றுத்தரும் பாடங்கள்…

Byadmin

Apr 25, 2022

நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.

எந்தநேரமும் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கிற உள்ளுணர்வுடன் செயல்படுகிறார்கள். எந்தநிலையிலும் இறைக்கட்டளைக்கு முதலிடம், இறை உவப்பே தனது இலக்கு என்கிற பயிற்சியினைப் பெறுகிறார்கள்.

பகலில் நோன்பு நோற்பதன் மூலமும், இரவில் தொழுகையின் மூலமும், இப்பயிற்சியினைப் பெறுகின்றார்கள். குர்ஆனுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பும் மிக முக்கிய காரணம் ஆகிறது. குர்ஆனை ஓதுதல், கேட்டல், புரிதல் ஆகியவற்றின் மூலமாக பயிற்சி மெருகூட்டப்படுகிறது.

வழக்கமாக உணவு உண்ணும் வேளைகளில் உணவை உண்ணாமலும், ஆழ்ந்து தூங்கக் கூடிய நேரத்தில் உண்ணுவது என்ற அளவில் நமது செயல்பாடுகளை இறைக் கட்டளைகளுக்காக மாற்றிக் கொள்கின்றோம். அவ்வண்ணமே தாம்பத்ய வாழ்விலும் சில மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றோம், இறைவன் கட்டளை என்பதால். அவன் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்கிற உள்ளுணர்வு நம்முள் உண்டாகின்றது.

இவ்வாறான நமது இறையச்சத்தின் காரணமாக இறைவனின் திருப்தியையும் அவனது அருளையும் ஒருங்கே பெறுகின்றோம். அதனால்தான் இறைவன் “நோன்பிற்கு நானே கூலி வழங்குவேன்” என்று கூறுகின்றான்.

இம்மாதத்தில் செய்யப்படும் நற்செயலுக்காக கூலி பன்மடங்காக இறைவன் வழங்குகின்றான். இறைநம்பிக்கையாளர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கூடுதலாக நன்மைகளை அறுவடை செய்கின்றார்கள். அதனால்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது இவ்விதமாக பிரார்த்தனை செய்வார்கள்:

“தாகம் தீர்ந்தது, நரம்புகள் நனைந்தன, கூலி உறுதியாகிவிட்டது, அல்லாஹ் நாடினால்”.

நோன்பாளியின் அனைத்து செயல்களும் இறைவனின் கூலியை எதிர்பார்த்துதான் இருக்கின்றன. நோன்பு திறக்க நமது பள்ளிவாசல்களில் செய்யப்படும் ஏற்பாடுகளும், மக்கள் அதற்காக செலவு செய்ய போட்டி போடுவதுமாக – இறைநம்பிக்கையாளர்கள் இறையருளை பெற காட்டும் ஆர்வம்தான் என்ன! கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆக, நன்மையான செயல்களை தொடருவோம். நன்மை தட்டை கனக்கச் செய்வோம். பெற்ற பயிற்சியை தொடர்ந்து கடைப்பிடிப்போம். அதுதான் நாம் ரமலான் மாதத்தின் மூலம் பெறக் கூடிய ‘தக்வா’ என்ற இறையச்சமாக திகழ முடியும்.

நசீர் அதாவுல்லாஹ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *