இலங்கையில் மேலும் ஒரு ரில்லியன் பணத்தை அச்சடிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும், எதிர்வரும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையும் எனவும், இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். எதிர்வரும் நாட்களில் வரவிருக்கும் கடினமான நாட்களை பார்க்கும் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் துன்பப்படும் போது, ஆர்ப்பாட்டம் நடத்துவது இயற்கையானது. கட்டாயம் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்.எனினும் அது அரசியல் கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மையை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகின்றோம்.இந்த நிலைமைகள் கடினமாகும் என்பதை நாம் அறிவோம். ஆகவே இரண்டு ஆண்டு நிவாரண திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்.அனைத்து அபிவிருத்தி பணிகளையும் இடைநிறுத்தும் வகையிலான இடைக்கால வரவு செலவுத் திட்டம் தேவை. இதன்மூலம் நிதியை நிவாரண திட்டத்திற்கு ஒதுக்க முடியும். உதாரணமாக சுகாதார அமைச்சுக்கான நிதியை குறைக்க முடியாது, கல்வி அமைச்சுக்கான நிதியையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குறைக்க முடியும்.எனினும் நிதிக்குறைப்பு செய்யக்கூடிய மேலும் பல அமைச்சுகள் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள நட்பு நாடுகளின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.எங்களுக்கு அதிகமான அரிசி தேவைப்படும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடித்த கடனை பெற முடியும் என நம்புகின்றோம். போதுமான உணவு இருப்பதை உறுதி செய்ய, வெளிநாட்டில் உள்ள எமது நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்க்க வேண்டும்.அதிக வட்டி வீதங்களை செலுத்துவதை உறுதி செய்யும் அதேவேளை, இரண்டாவதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.அதனை தனியாக செய்ய முடியாது.எமக்கு ரூபா வருமானம் இல்லை. ஆகவே தற்போது மேலும் ஒரு ரில்லியன் பணத்தை அச்சிட வேண்டும். இது பணவீக்கத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் பணவீக்கமானது 40 வீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.அடுத்த வாரமளவில் இலங்கை சீன தூதுவரை சந்திக்க முடியும் என நம்புகின்றேன். என்ன கிடைக்கும் என பார்க்க வேண்டும்.எங்களுக்கு உரத்திற்கான தேவை காணப்படுகின்றது. அதில் நான் கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார்.