மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனிடம் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் சட்டத்தரணிகள் குழுவொன்று ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை சந்தித்தது. இதன்போது, முஸ்லிம் சட்டத்தரணிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறித்த ஆவணங்கள் அடங்கிய கோப்பொன்றை அவரிடம் சமர்ப்பித்தார்.
இச்சந்திப்பில், முக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுபல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை, அவற்றுக்கு எதிராக பொலிஸார்பாரபட்சமாக செயற்பட்டமை, இதுதொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட மிகமுக்கிய ஆவணங்கள் ஆதாரபூர்வமாக சிராஸ் நூர்தீனால் ஐ.நா. அறிக்கையாளிடம் கையளிக்கப்பட்டன.
ஞானசாரருக்கு எதிராக மாத்திரம் 48 முறைப்பாடுகள் உள்ளன. 45 நாட்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 25 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் இதற்காக 5 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்திற்குள்ளும் நாங்கள் நீதியைத் தேட வேண்டியுள்ளது என ஐ.நா. பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
சட்டத்தை சகலருக்கும் சரிசமமாக பிரயோகிக்க வேண்டும். எனினும் முஸ்லிம்கள் விடயத்தில் சட்டம் சரிசமமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் முஸ்லிம்கள் சட்டத்தில் நம்பிக்கையிழக்கும் நிலை உருவாகும். யுத்தம் முடிந்துவிட்ட நிலையில் ஒரு சமூகம் சட்டத்தில் நம்பிக்கை இழப்பதானது நாட்டின் வளர்ச்சிக்கு உதவமாட்டாது எனவும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஐ.நா. அதிகாரியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவை தொடர்பில் தாம் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவருதாக ஐ.நா. அதிகாரி வாக்குறுதி வழங்கியுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி – விடிவெள்ளி