• Mon. Oct 13th, 2025

20 பேருடன் ரணிலின் பக்கம் சாயப் போவதாக, வெளியான தகவல் முற்றிலும் பொய் – ரஞ்சித் மத்தும பண்டார

Byadmin

Aug 18, 2022

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.

சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கம் எவ்வாறு ஆட்சி அமைக்கும் என இன்று நாடு முழுவதும் பேசப்படுகிறது. இது குறித்து எதிர்க்கட்சிக்குள்ளும் தொடர்ந்து பேசப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்தோம். பாராளுமன்றத்தை பலப்படுத்தி அதனூடாக செயற்படுவேன் என ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தனது கொள்கை பிரகடன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே இந்தக் குழுக்கள் முறைகளின் ஊடாக  நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற குழு அமைப்பில் இருந்தவாறு  அரசாங்கத்திற்கு உதவ தீர்மானித்துள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தியாக அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற நாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தில் ஆளுனர் பதவிகளைப் பகிர்வதில் ஏற்கனவே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.  அமைச்சுகளுக்கு பலரும் முன்மொழியப்படுகின்றனர். எனினும் நாம் பதவிகளுக்கு பேராசை கொள்ளாமல் பதவிகளை பெறாமல் இந்நாட்டின் வேலைத்திட்டத்திற்கு உதவ தயாராக உள்ளோம்.

சில ஊடகங்கள் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு வருந்துகிறோம்.ஐக்கிய மக்கள் சக்தியை ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம்.

ஒரு கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக பதவியேற்றதும் எம்மில் பெரும் குழுவொன்று செல்வதாக கூறப்பட்டது.ஆனால் இரண்டு பேர்தான் சென்றனர். பாராளுமன்றத்தில் இடம் பெற்ற இடைக்கால ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஒரு உறுப்பினர் கூட கட்சியின் கொள்கைக்கு புறம்பாக வாக்களிக்கவில்லை.

மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் ரணிலின் பக்கம் நெருக்கம் என இன்று பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது முற்றிலும் பொய்யான அறிக்கை.ஊடகங்கள் இதைவிட இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 2006 இல் தான் எனக்கு முதலில் அமைச்சு வழங்கப்பட்டது.அப்போது நான் கட்சியை விட்டு செல்லவில்லை. இந்த ஊழல் கும்பலை வைத்து நாட்டை ஆளப்போகும் அரசாங்கத்திற்கு ரஞ்சித் மத்தும பண்டார செல்லமாட்டார் என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது கட்சி ஆதரவை வழங்குவோம்.எமது கட்சியிலிருந்து யாரும் போவதில்லை.

பலமான அடித்தளத்துடனையே ஐக்கிய மக்கள் சக்தியை நிறுவினோம் என்று இவர்களுக்குச் சொல்கிறோம்.ஐக்கிய மக்கள் சக்தி என்பது கூட்டுணர்வு,ஒற்றுமை மற்றும் நட்பு என்பன அப்படியே உள்ளன. இதை யாராலும் உடைக்க முடியாது.இன்று சமூக வலைதளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாக உடைக்கும் பெரிய செயற்பாடு நடக்கிறது. ஆட்சி அமைப்பது தனிப் பணி என்றும், இந்தப் பள்ளத்தில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது மற்றுமொரு தனிப் பணி இல்லையா என நான் கேட்கிறேன்.அல்லது கட்சியை பிளவுபடுத்துவதா பிரதான பணி?.

அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் இதில் ஈடுபடமாட்டார்கள்.தெளிவான முடிவு எடுக்கப்பட்டே ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.பாராளுமன்ற முறை மூலம் ஆதரவு வழங்குவோம். இந்த ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வதையிட்டு வருந்துகிறேன்.

பத்திரிக்கையில் சிறிய பகுதியை போட்டு காலையில் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒளிபரப்புகின்றனர். இதை நான் கண்டிக்க மாட்டேன், ஆனால் அரசியல் ரீதியாக நாம் கட்டமைத்த ஒன்று இருக்கிறது.

தயவு செய்து ஊடக நெறிமுறைகளை காக்க முயற்சியுங்கள்.எமது கட்சியை பாதுகாத்து  நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவுமே நாங்கள் உழைக்கிறோம்.கீழ்தரமான ஊடக பவனைகளை கைவிட்டு நெறிமுறைகளுடன் தகவல்களை வெளியிடுமாறு கூறுகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *