• Sat. Oct 11th, 2025

விவசாயத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி

Byadmin

Jul 22, 2017

எமது பண்டைய நீர்ப்பாசன கலாசாரத்தை மீண்டும் நாட்டில் ஏற்படுத்துவதன் ஊடாக விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதுடன், அத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 25க்கும் மேற்பட்ட குளங்கள் இவ்வருடத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தேசிய உணவுற்பத்தி செயற்திட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களைப் பாராட்டும் முகமாக வரலாற்றுச்சிறப்புமிக்க கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு அருகில் இன்று (21) முற்பகல் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் குளங்களின் புணரமைப்பு, வீதி அபிவிருத்தி, யானைகளுக்கான மின்வேலியமைத்தல், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான மூன்று வருட திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ”சிறிசர பிவிசும” மாவட்ட செயற்திட்டத்திற்கு ஜனாதிபதி செயலகத்தினால் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் வழங்கப்பட்ட 1,000 மில்லியன் ரூபாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான செலவில் 25க்கு மேற்பட்ட குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 500 சிறிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதுடன், ஒரு குளத்திலிருந்து மறு குளத்திற்கு நீர் நிரப்புத்தக்கவாறு, மழை நீரை வீணாக்காத வலைப்பின்னல் முறையிலமைந்த எமது பண்டைய நீர்ப்பாசன முறைக்கேற்ப இந்த புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புனரமைக்கப்பட்ட கந்தளாய் கல்தலாவ 12வது பிரிவு குளம் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேச மக்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் செயற்படுத்தப்பட்ட இச்செயற்திட்டத்திற்கு இலங்கை இராணுவத்தினரும் தமது பங்களிப்பினை வழங்கியதுடன், 23 மில்லியன் ரூபாவென செலவு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த கல்தலாவ 12வது பிரிவு குளத்தின் புனரமைப்புச் செயற்பாடுகளை 5 மில்லியன் ரூபா செலவில் நிறைவுசெய்ய முடிந்தமை விசேட அம்சமாகும்.

பெயர் பலகையை திரைநீக்கம் செய்து புனரமைக்கப்பட்ட குளத்தினை ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் கையளித்தார்.

அத்துடன் “சிறிசர பிவிசும” மாவட்ட செயற்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக டிரெக்டர், பௌசர், டேலர் இயந்திரங்கள் மற்றும் 5 கெப் வாகனங்கள் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவிற்கு உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.

அதன் பின்னர் கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு அருகில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டில் தேசிய உணவுற்பத்தியில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களை பாராட்டும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் வரலாற்று அடிப்படை மற்றும் வரலாற்றின் சுபீட்சமான யுகங்களைக் கருத்திற்கொள்ளும்போது விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறையினூடாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

விவசாய பொருளாதாரத்தினால் நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் விவசாய மக்களுக்கு சிறந்த பொருளாதார நிலையை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதுடன், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதை விடுத்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களினால் நாடு தன்னிறைவடைய வேண்டுமென்றும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு முன்னுரிமை அளித்து செயற்படுதல் தற்போதைய அரசின் கொள்கையாகும் என்றும் தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் அநுராதபுரம், பொலன்னறுவை, திருக்கோணமலை மற்றும் 700க்கும் மேற்பட்ட வடமேல் மாகாண வாவிகள் புனரமைக்கப்படுவதாகவும், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வேலைகள் நிறைவடைந்ததன் பின்னர் பல தசாப்தங்களாக நீரின்றி சிரமப்பட்ட இப்பிரதேச மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்க்கமான, நிலையான தீர்வு கிடைக்குமென்றும், இதனூடாக கந்தளாய் பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கும் நிலையான தீர்வு கிடைக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

”கருணைமிகு ஆட்சி – நிலையான நாடு” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பான உணவு மற்றும் பேண்தகு விவசாய எண்ணக்கருவின் கீழ் தேசிய உணவுற்பத்தி மேம்பாட்டிற்காக ஆற்றப்பட்ட விசேட பணியை பாராட்டி 48 விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் விருதுகள் வழங்கினார்.

இத்திட்டத்தின்கீழ் முதலிடத்தை பெற்றுக்கொண்ட 17 பேருக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.
கால்நடை வளங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் பிரிவு போன்ற மூன்று துறைகளின் கீழ் இவ்விருதுகள் வழங்கப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பங்கள், நவீன பயிர்ச்செய்கை முறைகளின் பாவனை மற்றும் இரசாயன பசளை பாவனையைக் குறைத்து சேதன பசளையை உற்பத்திக்காக பயன்படுத்தல் போன்ற விடயங்கள் இந்த விவசாயிகளை தேர்ந்தெடுக்கும் பிரதான நிபந்தனைகளாக கருதப்பட்டன.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, தயா கமகே ஆகியோரும் பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவத்தி கலபத்தி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திருகோணமலை விசேட கருத்திட்ட பணிப்பாளர் பிரியந்த பத்திரன, சேருவில ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவீன் குணவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *