• Mon. Oct 13th, 2025

எல்லோரும் அவ்வாறில்லை, மனிதநேயம் கொண்டவராக திகழும் “முஹம்மத்”

Byadmin

Nov 3, 2022

நாட்டின் பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் பொதுவாக கண்டனங்களும் விமர்சனங்களும் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், எல்லோரும் அவ்வாறில்லை என்பதுதான் உண்மை. மனிதநேயம்கொண்ட நல்லவர்களும் இருக்கின்றார்கள் என்பதை பாணந்துறை சாரதி ஒருவரின் சிறந்த நடத்தை எடுத்துக் காட்டியுள்ளது. அத்துடன் பயணிகளும் பஸ் நிலைய ஊழியர்களும் அவரைப் பாராட்டியுள்ளனர்.

பாணந்துறை பிரதான தனியார் மத்திய பஸ்நிலையத்திலிருந்து ஹொரண சேவையில் ஈடுபடும் ND3297 என்ற இலக்கம் கொண்ட பஸ்வண்டியின் சாரதியான எம்.ஏ.எம்.முஹம்மத் என்ற சாரதியே சிறந்த மனிதநேய சேவையாளர் என பாராட்டுப் பெற்றுள்ளார்.

மொரட்டுவை கட்டுப்பெத்தையில் தொழில்நுட்ப கல்வி பெறும் வெளிமாகாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் அண்மையில் இந்த பஸ் நிலையத்தில் திடீர் சுகவீனமடைந்துள்ளார். இதனைக் கண்ட குறிப்பிட்ட சாரதி பஸ்நிலையத்துக்கு அருகிலுள்ள பெண் ஒருவரின் வியாபார நிலையத்துக்கு இந்த யுவதியை அழைத்துச் சென்று தேவையான உதவிகளைச் செய்துள்ளார். அத்துடன் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த யுவதியின் நண்பர்களுக்கும் தகவல் கொடுத்து வைத்திய சிகிச்சை பெறவும் வழிகாட்டியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க இந்த பஸ்நிலையத்தில் குறிப்பிட்ட சாரதியால் அண்மையில் மூன்று இலட்ச ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

அப்பணத்தை அவர் உரியவரிடம் முறையாகக் கையளித்த நேர்மைமிகு செயலும் வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தது.இவர் நேர்மையான, முன்மாதிரியான சாரதியாக பயணிகளால் போற்றப்படுகிறார். அவர் பஸ் நிலைய பணியாளர்களதும் பிரயாணிகளதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.இவரது நேர்மையான செயலும்,சேவைகளும் சமூக ஊடகங்களில் சிறந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு எனது சேவைக் காலத்தில் ஒருபோதும் நான் உதவி செய்வதில்லை. சாதாரண பயணிகள், பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக எனது கடமையை ஒருபக்கத்தில் வைத்து விட்டு மனிதநேய சேவைகளை முன்னெடுக்கின்றேன்” என்று அந்த சாரதி கருத்துத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *