• Mon. Oct 13th, 2025

வௌிநாட்டுப் பயணத் தடைக்கான காரணம் வௌியானது!

Byadmin

Nov 11, 2022


இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வெளிநாடு செல்வதற்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராக்கல் மனுவை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த மனு இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று இரவு டயனா கமகே நாட்டை விட்டு தப்பிச் செல்லவுள்ளதாகவும், அவர் வெளிநாடு சென்றால் விசாரணை முற்றாக நசுக்கப்படும் எனசட்டத்தரணி சமூகத்திற்கு மிகவும் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக சட்டத்தரணி வன்னிநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே குறுகிய காலத்திற்கு வெளிநாடு செல்வதை தடை செய்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி வன்னிநாயக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்த உத்தரவை பிறப்பிப்பது கடினம் என நீதவான் நந்தன அமரசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி வன்னிநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு வரும்போது டயனா கமகே வெளிநாட்டில் இருப்பார் என குறிப்பிட்டார்.

அப்போது இந்த வழக்கால் எந்த பயனும் ஏற்படாது என சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறுகிய காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தற்காலிகமாகத் தடை செய்யுமாறு கோரிய சட்டத்தரணி வன்னிநாயக்க, தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்கு வருகைதந்து வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்கிக் கொள்ளும் திறன் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றில் விடயங்களை நிரூபிக்குமாறு சட்டத்தரணிகளிடம் இதன்போது தெரிவித்தார்.

இதன்படி, சட்டத்தரணி துசித குணசேகர சமர்ப்பித்த சத்திய கடதாசியின் அடிப்படையில் சட்டத்தரணி வன்னிநாயக்க விடயங்களை முன்வைத்துள்ளார்.

அந்த விடயங்களை பரிசீலித்த பிரதம நீதவான் நந்தன அமரசிங்க, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *